பக்கம் எண் :

466மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 2

முருகக் கடவுளின் (ஸ்கந்த முருகனின்) பெயர்பெற்ற கதிர்காமம் உரோகண நாட்டில் இருந்தது. இப்போதும் கதிர்காமம் பேர்பெற்றுள்ள திருப்பதியாக இருக்கிறது. கதிர்காமத்தைச் சிங்களவர் `கதரகாமம்’ என்றும், `கஜரகாமம்’ என்றும், காசரகாமம்’ என்றும் கூறுவர். கதிர்காம முருகனைச் சிங்களவர் `கதரகாம தெவியோ’ (கதிர்காமத் தெய்வம்) என்று கூறுவர்.இலங்கையின் நான்கு பெரிய காவல் தெய்வங்களில் கதிர்காமக் கந்தனும் ஒரு தெய்வமாகக் கருதப்பட்டான். பழங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த இலங்கைக்கு முருகன் வழிபாடு சென்றது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் பாண்டிநாட்டுத் தமிழர் உரோகண நாட்டுக்கு வந்து குடியேறியபோது அவர்கள் தங்களுடைய முருக வழிபாட்டை உரோகண நாட்டில் நிறுவினார்கள். முருகன் குறிஞ்சிநிலக் கடவுள் ஆகையால், தமிழரின் வழக்கப்படி அவர்கள் கதிர்காம மலைமேல் முருகனுக்குக் கோயில் கட்டி வழிபட்டார்கள். பிற்காலத்தில் பௌத்த மதம் இலங்கையில் பரவினபோது பௌத்த பிக்குகள் மலைமேல் இருந்த முருகனைக் கீழே இறக்கிவிட்டு மலைமேல் தாகோபா (தாதுகர்ப்பத்தைக்) கட்டிவிட்டனர்.

உரோகண நாட்டில் தமிழா வழிபட்ட இன்னொரு கோயில் அட்டாலயம் என்பது. அது சிவன் கோயிலா, கொற்றவை கோயிலா என்பது தெரியவில்லை. தேவனாம்பிய திஸ்ஸனுடைய தம்பியான மகாநாகன். தன்னுடைய உயிருக்கு அஞ்சி உரோகண நாட்டு மச்சமகாராசனிடம் அடைக்கலம் புகச் சென்ற போது இந்த அட்டாலயத்தில் அவனுடைய மனைவி குழந்தையைப் பெற்றாள். அந்தக் குழந்தைக்கு அவன் அட்டாலய திஸ்ஸன் என்று பெயர் இட்டான்.1 உரோகன நாட்டில் இருந்த இன்னொரு கோயில் சிவன்கோயில் என்று தோன்றுகிறது. அந்தக் கோயில் ஏரகாவில்ல என்னும் ஊரில் இருந்தது. நெடுங்காலமாக இருந்த அந்தக் கோயிலைப் பிற்காலத்தில் மகாசேனன் என்னும் சிங்கள அரசன்(கி.பி. 325-352) பௌத்தமத வெறிகொண்டு இடித்துப்போட்டு அங்குப் பௌத்த விகாரை ஒன்றைக் கட்டினான்.2

தமிழர் குடியேறி வாழ்ந்த உரோகண நாட்டைப்பாண்டியன் மரபைச் சேர்ந்த மச்சமகாராசர் (பாண்டியரின் அடையாளம்மீன்)கி.மு. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு.2 ஆம் நூற்றாண்டு வரையில் அரசாண்டனர். பல நூற்றாண்டுகளாக உரோகண நாட்டில்