பக்கம் எண் :

 : :

2. கொங்கு நாட்டுக் குறுநில மன்னர்கள்

அதிகமான் அரசர்

கொங்கு நாட்டைச் சேர அரசர் கைப்பற்றுவதற்கு முன்பு அந் நாட்டைப் பல சிற்றரசர் பரம்பரை யரசாண்டு கொண்டிருந்தது. அச் சிற்றரசர்களைப் பற்றி நமக்குத் தெரிந்தவரையில் கூறுகின்றோம். கொங்குநாட்டை யரசாண்ட சிற்றரசர்களில் தகடூரை யரசாண்ட அதிகமான் அரசர் பேர்போனவர். அவர்கள்அதிகமான் என்றும், அதியமான் என்றும் கூறப்பட்டனர். தகடூர் இப்போது தர்மபுரி என்று பெயர் கூறப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள தர்மபுரி வட்டமே பழைய தகடூர் நாடு. தகடூர்அதிகமான் அரசர் தகடூரில் கோட்டைக் கட்டிக் கொண்டு அரசாண்டார்கள். அது அதிகமான் கோட்டை என்று பெயர் பெற்றிருந்தது. அதிகமான் கோட்டை என்பது பிற்காலத்தில் ‘அதமன் கோட்டை’ என்று சிதைந்து வழங்கப்பட்டது. இந்த அதிகமான் கோட்டை தகடூரிலிருந்து (தர்மபுரியிலிருந்து) தென்மேற்கே 5 மைல் தூரத்திலிருக்கின்றது. சேலத்திலிருந்து வடக்கே 29 மைலில் இருக்கிறது.

தகடூரை, அதிகமான் அரசர் பரம்பரை பரம்பரையாக அரசாண்டார்கள். சங்க காலத்தில் அரசாண்ட தகடூர் அதிக மான்களில் மூவர் பெயர் மட்டும் தெரிகின்றது. அதிகமான் அரசர்களின் முன்னோன் ஒருவன் தேவலோகத்திலிருந்து கரும்பைக் கொண்டு வந்து கொங்கு நாட்டில் பயிராக்கினான் என்று ஒளவையார் கூறுகிறார்.1 தேவலோகத்தி லிருந்து கரும்பு கொண்டுவந்தான் என்பது மிகைப்படக் கூறலாகும். வேறு ஊர் எங்கிருந்தோ அவன் கரும்பைக் கொண்டு வந்து பயிராக்கினான் என்பதே சரியாகும்.

அதிகமான் அரசர்களில் முதன்முதலாக அறியப் படுகிறவன் நெடுமிடல் அஞ்சி என்பவன். சேர நாட்டு அரசனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (சேரன் செங்குட்டுவனுடைய தமயன்) நெடுமிடல்அஞ்சியை ஒரு போரில் வென்றான் என்று பதிற்றுப்பத்துச் செய்யுள் கூறுகிறது.2