பக்கம் எண் :

 : :

4. அந்துவஞ்சேரல் இரும்பொறை

உதியஞ்சேரலுடைய தம்பி, அந்துவஞ்சேரல் இரும்பொறை என்பவன். அந்துவஞ்சேரல் இரும்பொறை உதியஞ்சேரலுடைய தாயாதித்தம்பி. இவன் தளராத ஊக்கத்தோடு போர் செய்து தென் கொங்கு நாட்டில் சில நாடுகளைக் கைப்பற்றினான். இதனால், “மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த, நெடுநுண் கேள்வி அந்துவன்” என்று கூறப்பட்டான் (7 ஆம் பத்துப் பதிகம்).

இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றினபோது இவனுக்கு உதவியாக இருந்தவன் இவனுடைய தமயன் மகனான பல் யானைச் செல்கெழு குட்டுவன். இதனை,

“மாகெழு கொங்கர் நாடகப் படுத்த
வேல்கெழு தானை வெருவரு தோன்றல்”

(3ஆம் பத்து 2: 15 -16) என்பதனால் அறிகிறோம். இவன் காலத்தில் கொங்கு நாட்டில் சேர இராச்சியத்தை அமைப்பதற்குக் கால் இடப்பட்டது என்று கருதலாம். கொங்கு நாட்டை யரசாண்ட பொறையர் அரசர்களில் இவனே முதலானவன் என்று தோன்றுகிறான்.

அந்துவஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டுக் கருவூரை வென்று அதைத் தன்னுடைய தலைநகரமாக்கிக் கொண்டான். அங்கு வேண்மாடம் என்னும் அரண்மனையை அமைத்துக் கொண்டு அங்கிருந்து அரசாண்டான். அப்போது அவன் ‘சேரமான் கருவூ ரேறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் இரும்பொறை’ என்று பெயர் பெற்றான். நரிவெரூஉத்தலையார் அவனை நேரில் கண்டு பாடினார் (புறம். 5). அச்செய்யுளின் அடிக்குறிப்பு, “சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று நின் உடம்பு பெறுவாயாகென, அவனைச் சென்று கண்டு தம்முடம்பு பெற்ற நரிவெரூ உத்தலையார் பாடியது” என்று கூறுகிறது.

இந்தக் கொங்கு நாட்டுக் கருவூர் வேறு, சேரநாட்டுக் கடற் கரையிலிருந்த கருவூர் வேறு. அந்துவன் சேரல் இரும் பொறை இந்த ஊரை வென்றபோது இதற்குச் சேர நாட்டுத் தலைநகரமாகிய கருவூரின்