பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு81

“காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தன் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க.”

(சிலம்பு, கட்டுரை காதை: 79-84)

என்றும் வாழ்த்தினான்.

இதில் முதல் இரண்டு அடிகள் பல்யானைச் செல்கெழு குட்டுவனையும் மூன்றாம் நான்காம் அடிகள் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனையும், ஐந்தாம் ஆறாம் அடிகள் மாந்தரன் கடுங்கோ ஆகிய செ.க.வா. ஆதனையுங் குறிப்பிடுகின்றன. இம்மூன்று அரசர்களிடத் திலும் பராசரன் பரிசுகளைப் பெற்றபடியால் இம்மூவரையும் வாழ்த்தினான். இதனாலும் இம்மூவரும் சமகாலத்து அரசர்கள் என்பது உறுதியாகின்றது. பராசரன் பாண்டி நாட்டில் தண்காவில் தங்கிய காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்டவன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன், கொற்கையில் இளவரசனாக இருந்தவன் வெற்றிவேற் செழியன்.

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஏறத்தாழ கி.பி. 112 முதல் 137 வரையில் அரசாண்டான் என்று கருதலாம்.