120 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3 |
ஒவ்வொரு வெண்பாவின் இறுதியிலும் ஒவ்வொரு பழமொழி கூறப் படுகிறது. எனவே, இதில் நானூறு பழமொழிகள் கூறப்படுகின்றன. இந்தப் பழமொழிகள் எல்லாம் இந்நூலாசிரியர் காலத்துக்கு முன்பு (களப்பிரர் ஆட்சிக் காலத்துக்கு முன்பு) வழங்கி வந்தவை. இந்நூலாசிரியர் ஆருகத மதத்தைச் சேர்ந்தவர். பிண்டியின் நீழற் பெருமான் அடிவணங்கிப் பண்டைப் பழமொழி நானூறும்- கொண்டினிதா முன்னுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான் இன்றுவை வெண்பா இவை! என்பது இந்நூல் தற்சிறப்புப் பாயிரம். சிறுபஞ்சமூலம் இந்நூல் நூற்றிரண்டு செய்யுட்களையும் இரண்டு சிறப்புப் பாயிரச் செய்யுட்களையும் உடையது. பஞ்சமூலம் என்பது ஐந்து வகையான வேர்கள். அவை கண்டக்கத்திரிவேர், சிறுவழு துணைவேர், சிறுமல்லிவேர், பெருமல்லிவேர், நெருஞ்சிவேர் என்பவை. இந்த ஐந்து வேர்களைக் கொண்டு சிறுபஞ்சமூலம் என்னும் மருந்து செய்யப்பட்டு நோயாளிகளுக்குத் தரப்பட்டது. இந்தச் சிறுபஞ்சமூலம் என்னும் நூலில் ஒவ்வொரு செய்யுளிலும் ஐந்துஐந்து பொருள்கள் கூறப்படு கின்றன. இவை உடல் நோயைத் தீர்க்கிற சிறுபஞ்சமூலம் போன்று மன நோயைத் தீர்ப்பன ஆகையால் சிறுபஞ்சமூலம் என்று பெயர் பெற்றது. இந் நூலாசிரியரின் பெயர் காரியாசான். இந்நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் இது: முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம் பழுதின்றி யாற்றப் பணிந்து - முழுதேத்தி மண்பாய ஞாலத்து மாந்தர்க் குறுதியா வெண்பா உரைப்பான் சில ஏலாதி எண்பத்தேழு பாடல்களையுடைய இந்த நூலை எழுதியவர் பெயர் கணிமேதாவியார். கணி என்னும் சிறப்புப் பெயர், இவர் வானநூலைக் கற்றவர் என்பதைத் தெரிவிக்கிறது. வான நூலைப் பயின்றவர்கட்குக் கணி, கணியன் என்று பழங்காலத்தில் பெயர் இருந்தது. கணிதமேதாவியார் தமிழ்ப் புலமை பெற்றிருந்ததோடு |