பக்கம் எண் :

122மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3

பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய
வன்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியார்த்த
ஐந்திணை யைம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேராதவர்

என்று கூறுகிறது. இதில் செந்தமிழ் என்பது அகப்பொருளைக் குறிக்கிறது. தமிழ் என்பதற்கு அகப்பொருள் என்னும் பொருளும் உண்டு. அகப்பொருளைத்தான் இச்செய்யுள் செந்தமிழ் என்று கூறிகிறது.

திணைமொழி ஐம்பது

அகத்திணை ஐந்துக்கும் திணையொன்றுக்குப் பத்துச் செய்யுளாக அமைத்து ஐம்பது பாக்களினால் இயற்றப்பட்டது இந்நூல். இந்நூலை இயற்றியவர் கண்ணன் சேந்தனார். இவருடைய தந்தையாரின் பெயர் சாத்தந்தையார். ஆகவே, இவர் சாத்தந்தையார் மகனார் கண்ணஞ் சேர்ந்தனார் என்று கூறப்பட்டார்.

ஐந்திணை எழுபது

இந்நூலும் அகப்பொருள் ஐந்திணைகளைப் பற்றிக் கூறுகிறது. ஒவ்வொரு திணைக்கும் பதினான்கு பாக்களாக ஐந்து திணைகளுக்கு எழுபது பாடல்களைக் கொண்டது. இதன் ஆசிரியர் பெயர் மூவாதியார். இதன் கடவுள் வாழ்த்துக் கணபதியாகிய பிள்ளையாருக்குரியது.

எண்ணும் பொருளினிதே யெல்லா முடித்தெமக்கு
நண்ணுங் கலையனைத்து நல்குமால் -கண்ணுதலின்
முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலஞ்சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு

என்பது இதன் கடவுள் வாழ்த்து.

இந்தப் பிள்ளையார் கடவுள் வாழ்த்து இந்நூலாசிரியர் செய்ததன்று என்றும் பிற்காலத்தவர் யாரோ செய்தமைத்தது என்றும் திரு. சதாசிவ பண்டாரத்தார் கருதுகிறார். இதற்கு இவர் கூறும் காரணம் இது: “பிள்ளை யாரென்று வழங்கப்பெற்று வரும் விநாயகக் கடவுளின் வழிபாடு கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழ்நாட்டில் தொடங்கியது என்பது ஆராய்ச்சியால் அறிந்ததோர் உண்மையாகும். எனவே, அக் கடவுளுக்கு வாழ்த்துக் கூறப்பட்டுள்ள பாடல் இந்நூலாசிரியரால் இயற்றப்பட்டதன்று என்பது தேற்றம். அக்கடவுள் வாழ்த்துச் செய்யுள்