182 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3 |
கதையைக் கூறவில்லை. செல்லூரை யாண்ட அரசன் ஒருவன் ஆதன் எழினி என்பவனுடன் போர் செய்து அவனைக் கொன்ற செய்தியை அப்புலவர் கூறுகிறார். கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் கழனி யுழவர் குற்ற குவளையும் கடிமிளைப் புறவிற் பூத்த முல்லையொடு பல்லிளங் கோசர் கண்ணி யயரும் மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் எறிவிடத் துலையாச் செறிசுரை வெள்வேல் ஆதன் எழினி அருநிறத் தழுத்திய பெருங்களிற்று எவ்வம் (அகம்216: 8-15) இச்செய்யுளிலும், செல்லூர் கடற்கரைக்கு அருகில் இருந்ததென்பது கூறப்படுவது காண்க. பாரம் துளு நாட்டில் இருந்த இன்னொரு ஊர் பாரம் என்பது. இவ்வூரில் நன்னனுடைய சேனைத் தலைவனாகிய மிஞிலி என்பவன் இருந்தான். “பாரத்துத் தலைவன் ஆர நன்னன்” (அகம்.152:12) என்றும், “ பூந்தோள் யாப்பின் மிஞிலிகாக்கும் பாரம்” (நற் 265: 4-5) என்றும் இவ்வூர் கூறப்படுகிறது. பாழி இவ்வூர் பாழி என்னும் மலைக்கு அருகிலே இருந்தது. ஆகவே அம்மலையின் பெயரே இவ்வூருக்கும் பெயராயிற்று. பாழிமலை, ஏழில் மலையின் ஒரு பகுதி “ பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச்சிலம்பு” (அகம் 152: 12- 13). இவ்வூரைச் சூழ்ந்து கோட்டை மதில் இருந்தது என்பது, ‘செம்பு உறழ் புரிசைப் பாழி’ (அகம் 375: 13) என்பதனால் தெரிகிறது. மேலும், இவ்வூர் ‘கறையடி யானை நன்னன் பாழி’ (அகம்.142:9) என்றும் சூழி யானை சுடர்ப்பூண் நன்னன் பாழி யாங்கண் கடியுடை வியன்நகர் (அகம் 15: 10-11) என்றும் கூறப்படுகிறது. பாழி நகரைச் சூழ்ந்து இருந்த இடம் ‘பாழிப் பறந்தலை’ (அகம் 208: 6) என்று பெயர் பெற்றிருந்தது. பாழிமலை மேலிருந்து பார்த்தால் அதனைச் சூழ்ந்திருந்த நாடுகள் தெரிந்தன. |