பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு185

                         ஓங்கு புகழ்க்
கானமர் செல்வி அருளலின் வெண்கால்
பல்படைப் புரவி எய்திய தொல்லிசை
நுணங்குநுண் பனுவல் புலவன் பாடிய
இனமழை தவழும் ஏழிற் குன்றத்து                          (அகம் 345: 3-7)

என்றும் இது கூறப்படுகிறது.

இதனால் ஏழில்மலையில் கானமர் செல்வியாகிய கொற்றவைக்கும் கோவில் இருந்தது என்றும், ஏழில்மலையை ‘நுணங்கு நுண்பனுவல் புலவன்’ ஒருவன் பாடினான் என்றும் தெரிகின்றன. ஏழில்மலையைப் பாடிய புலவன் பரணராகவோ அல்லது மோசிகீரனாராகவோ இருத்தல் வேண்டும்.

ஏழில்மலை, மேற்குக் கடற்கரையோரமாகக் கண்ண னூருக்கு வடமேற்கே 16மைல் தூரத்தில் இருக்கிறது. ஏழில்மலை என்னும் இரயில் நிலையமும் உண்டு.

சங்க காலத்தில் துளு நாட்டைச் சேர்ந்திருந்த இந்த ஏழில்மலை இப்போது மலையாள நாட்டில், மலபார் மாவட்டத்துச் சிறைக்கல் தாலுக்காவில் சேர்ந்திருக்கிறது. ஆனால், இது முன்பு துளுநாட்டைச் சேர்ந்திருந்தது. பிற்காலத்தில், மலையாளிகள் இதனை ‘ஏழிமல’ என்று அழைத்தனர். ழகரத்தை உச்சரிக்கத் தெரியாத மேல்நாட்டார் முதலியோர் இதனை ‘யய்முல்லை’ (Yai Mullay) என்று கூறினார்கள். சிலர், ஏழில்மலையை எலிமலை என்று வழங்கினார்கள். வடமொழி யாளர், எலிமலை என்பதை மூஷிகமலை என்று மொழிபெயர்த்துக் கொண்டு தங்கள் வழக்கம்போல மூஷிக வம்சம் என்னும் பெயருள்ள நூலை எழுதினார்கள். மூஷிக வம்சத்தில் ஏழில்மலையை யரசாண்ட பிற்கால அரசர்களைப் பற்றியும் அது சம்பந்தமான புராணக் கதைகளையும் எழுதி வைத்தனர்.

பிற்காலத்தில் வாணிகத்துக்காக வந்த போர்ச்சுக்கீசியர் இந்த மலையை எலிமலை என்றே கூறினார்கள். அவர்கள் ‘ மவுண்ட் - டி - எலி (Monte D’ Ele) என்று கூறினார்கள். அப்பெயர் பிற்காலத்தில் ‘டெல்லி’ (Delli) என்று குறுகிற்று.

ஏழில்மலை, அரபிக்கடலில் 27 மைல் தூரம் வரையில் தெரிந்தது. வாஸ்கோ-டி-காமா என்னும் போர்ச்சுக்கீசியர் முதல் முதல் இந்தியா