பக்கம் எண் :

186மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3

வுக்கு வந்தபோது அவருக்குக் கடலில் முதல் முதலாகக் காணப்பட்ட இடம் இந்த மலையே. 1498 இல், ஏழில்மலையைக் கடலில் இருந்து கண்ட அவர் தன் கப்பலைக் கண்ணனூருக்கு அருகில் செலுத்திக் கரை இறங்கினார்.

ஏழில்மலை கடற்கரைக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் இருக்கிறது. இங்குக் கடற்கொள்ளைக்காரர் இருந்தனர் என்று முற்காலத்துப் பிற்காலத்து அயல் நாட்டார் எழுதியிருக்கிறார்கள். துளு நாட்டை யரசாண்ட நன்ன அரசர்களும் கடற்கொள்ளைக்காரருக்கும் உதவியாக இருந்தனர் என்பது தெரிகின்றது.

கடம்பின் பெருவாயில்

கடம்பின் பெருவாயில் என்னும் ஊர் துளு நாட்டில் இருந்தது. இவ்வூரில் நடந்த போரில், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், நன்னனை வென்றான்.

உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செறுவின் ஆற்றலை யறுத்தவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து

(பதிற்று. 4ஆம் பத்து, பதிகம்)

வாகைப் பெருந்துறை

இதுவும் துளு நாட்டின் தெற்கில் இருந்த ஊர். இது வாகைப் பறந்தலை என்றும் பெயர் பெற்றிருந்தது. இவ்வூரில் பசும்பூட் பாண்டிய னுடைய சேனைத் தலைவனான அதிகமான் என்பவன் போர் செய்து இறந்தான்.

கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூட் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை                          (குறுந்393: 3-5)

களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் இவ்வூரில் நன்னனுடன் போர் செய்தான்.

                         குடாஅது
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவிற்
பொலம்பூண் நன்னன் பொருது களத்தொழிய
வலம்படு கொற்றத் தந்த வாய்வாட்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்                          (அகம்199: 18-22)