பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - துளு நாடு211

சோழன் கரிகாலன் இறந்த பிறகு செங்குட்டுவனின் மைத்துன னான கிள்ளிவளவனுக்கும் ஒன்பது தாயாதிகளுக்கும் நடந்த அரசாட்சி உரிமைப் போரில், செங்குட்டுவன் தன் மைத்துனனுக்காகச் சோழ மன்னர் ஒன்பது பேருடனும் போர் செய்து வென்று சோழ ஆட்சியைத் தன் மைத்துனனுக்குக் கொடுத்ததும். கங்கைக் கரைக்குச் சென்று கனக விசயரை வென்று சிறைப்பிடித்துக் கொண்டுவந்ததும், கண்ணகிக்குப் பத்தினிக்கோட்டம் அமைத்ததும் ஆகியவை எல்லாம் செங்குட்டுவ னின் ஆட்சிகாலத்தின் பிற்பகுதியில் துளு நாட்டுப் போர்கள் முடிந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்தன.

III. இது வேறு விதமாகவும் தெளிவாகிறது. பரணர் என்னும் புலவர், மேலே கூறிய சேர அரசர், நன்ன அரசர்களின் சமகாலத்தில் இருந்தவர். அவர் நெடுஞ்சேரலாதன், நார்முடிச் சேரல், செங்குட்டுவன் ஆகிய சேர அரசர் காலத்திலும் நன்னன் முதலாவன், நன்னன் இரண்டாவன், நன்னன் மூன்றாவன் என்னும் மூன்று துளுவ அரசர் காலத்திலும் இருந்தவர் என்பது அவருடைய பாடல்களினால் தெரிகின்றது.

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆரிய அரசரை வென்றதையும் யவனரைச் சிறைப்பிடித்து வந்ததையும் இமயத்தில் வில் பொறித் ததையும் பரணர் கூறுகின்றார் (அகம் 396: 16-18). நெடுஞ் சேரலாதன் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியுடன் போர் என்னும் இடத்தில் போர் செய்து இருவரும் புண்பட்டுப் போர்க்களத்தில் விழுந்து சிலகாலம் உயிர் போகாமல் கிடந்தபோது அவர்களைப் பரணர் நேரில் பாடியுள்ளார் (புறம் 63) இச்செய்யுளின் அடிக்குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பஃ றடக்கைப் பெருவிறற்கிள்ளியும் போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரை அக்காலத்திற் பரணர் பாடியது” என்று அக்குறிப்புக் கூறுகிறது.1

நெடுஞ்சேரலாதன் காலத்தில் இருந்த முதலாம் நன்னனையும் பரணர் தம்முடைய செய்யுட்களில் குறிப்பிட்டுள்ளார். அந்த நன்னன் பெண் கொலை புரிந்தவன் என்றும் (குறுந். 292: 1-5) அவனுடைய மாமரத்தைக் கோசர் சூழ்ச்சி செய்து வெட்டிவிட்ட செய்தியையும் (குறுந். 73: 2-4) பரணர் கூறுகின்றார்.

இதனால் பரணரும் நெடுஞ்சேரலாதனும் முதலாம் நன்னனும் சமகாலத்திலிருந்தவர் என்பது தெரிகின்றது.