பக்கம் எண் :

106மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

‘அகல்வயல் கிளைவிரி கரும்பின் கணைக்கால்
வான்பூ’

(அகம், 235 : 11-12)

‘அகல்வயல் நீடுகழைக் கரும்பின் கணைக்கால்
வான்பூ’

(அகம், 217 : 3-4)

‘விரிபூங் கரும்பின் கழனி’

(2ஆம் பத்து 3:13)

‘தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பு.’

(குறுந், 85 : 4)

கரும்பைச் சாறு பிழியும் எந்திரங்களும் கருப்பஞ்சாற்றை வெல்லங் காய்ச்சும் ஆலைகளும் ஊர்கள் தோறும் இருந்தன. பாண்டி நாட்டுத் தேனூரில் கரும்பைச் சாறுபிழியும் எந்திரமும் வெல்லங் காய்ச்சும் ஆலையும் இருந்தன.

‘கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்
தேர்வண் கோமான் தேனூர்’

என்று ஐங்குறுநூறு கூறுகின்றது.

வெல்லத்துக்கு விசயம் என்று பெயர் கூறப்பட்டது. வெல்லக் கட்டியைச் சுருக்கமாகக் கட்டி என்றும் கூறினார்கள். வெல்லம் ‘கரும்பின் தீஞ்சாறு’ என்றும் கூறப்பட்டது.

‘எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
விசயம் அடூஉம் புகைசூழ் ஆலை தொறும்
‘கரும்பின் தீஞ்சாறு’ விரும்பினர் பெறுமின்’

(பெரும்பாண். 260-261)

என்றும்,

‘ஆலைக் கலமரும் தீங்கழைக் கரும்பே!’

(மலைபடு கடாம் : 119)

என்றும்,

‘மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக்
கழைகண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்’

(மலைபடு கடாம் : 340 - 341)

என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.

திருவிழாக் காலத்தில் வீடுகளை அலங்கரித்த போது வாழை மரத்தையும் கருப்பங் கழிகளையும் கட்டி அலங்காரம் செய்தார்கள்.