பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 107 |
‘காய்க்குலைக் கமுகும், வாழையும், வஞ்சியும் பூங்கொடி வல்லியும், கரும்பும் நடுமின்’ (மணிமேகலை 1 : 46-47) வெல்லத்தை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தியமையால் வெல்லங் காய்ச்சும் தொழிலும் கரும்பு பயிரிடும் விவசாயமும் தமிழகத்தில் சிறப்பாக நடந்தன. வெல்லம் சர்க்கரை விற்ற வாணிகருக்குப் பணித வாணிகர் என்பது பெயர். மதுரைக்குப் பதின்மூன்று கல் தூரத்தில் அழகர் மலை என்னும் மலையும் கோயிலும் உள்ளன. அழகர் மலைக்கு அருகே கிடாரிப் பட்டி என்னும் ஊருக்கு அருகில் இந்த மலையின் மேல் இயற்கையாக அமைந்த ஒரு குகை இருக்கின்றது. இந்தக் குகையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த, ஜைன மதத்து முனிவர்கள் இருந்து தவஞ் செய்தார்கள். அந்த முனிவர்கள் தங்குவதற்காக அந்தக் குகையைச் செப்பஞ் செய்து குகைக்குள் கற்படுக்கைகளைச் சில செல்வர்கள் அமைத்தார்கள். கற்படுக்கைகளை யமைத்தவரின் பெயர்கள் அக் குகையிலே பிராமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ளன. அப்பெயர்களில் ஒருவர் பெயர் பணித வாணிகன் நெடுமூலன் என்று எழுதப்பட்டிருக் கின்றது.1 பணித வாணிகன் என்றால் வெல்லக் கட்டி சர்க்கரை விற்கும் வாணிகன் என்பது பெயர். இந்தப் பிராமி எழுத்தின் அமைப்பைக் கொண்டு இது கிருத்துவுக்கு முன்பு இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்று ஆராய்ச்சி அறிஞர்கள் கூறகிறார்கள். எனவே அந்தப் பணித வாணிகன் நெடுமுலன் 2200 ஆண்டுகளுக்கு முன்னே கடைச் சங்க காலத்தில் இருந்தவன் என்பது தெரிகின்றது. அந்தக் காலத்தில் ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்தவர் களுக்குக் கரும்பும் கரும்புக் கட்டியும் தெரியாது. அவர்கள் தேனையுண்டனர் தேனும் போதிய அளவு கிடைத்திருக்காது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியருக்குக் கரும்பும் வெல்லமும் தெரிந்தன. ஐரோப்பாவில் விளைத்த பீட்ரூட் கிழக்கிலிருந்து சர்க்கரையைக் காய்ச்சும் விதத்தை அவர்கள் 18ஆம் நூற்றாண்டில் அறிந்தனர். பாரத நாட்டிலும் தமிழகத்திலும் 2,000 ஆண்டு களுக்கு முன்பே கரும்பும் கரும்புக் கட்டியும் தெரிந்திருந்தன. தமிழகத்தில் கரும்புப் பயிர் செய்வது கரும்புக் கட்டிக் காய்ச்சுவதும் சங்க காலம் முதல் நடைபெற்று வருகின்றன.
1. (M.E.R. No 75 of 1910) |