பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு111

`ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினி தொழுகுமதி பெரும’                    (புறம். 24: 31-33)

சேரமான் மாவெண்கோவும் பாண்டியன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியும் சோழன் இராசசூயம் வேட்ட பெருங்கிள்ளியும் ஒருங்கிருந்த போது அவர்களை அவ்வையார்,

‘பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து’                    (புறம், 367 : 6-7)

இருப்பீர்களாக என்று வாழ்த்தினார். ‘வேந்தர்க் கேந்திய தீந்தண் நறவம்’ (புறம், 291-1)

அரிக்கமேடு என்னும் இடத்தை அகழ்ந்து பார்த்த போது அங்கு கி.மு. முதல் நூற்றாண்டில் யவனர் (கிரேக்க - ரோமர்) தங்கியிருந்த வாணிக நிலையம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குக் கிடைத்த பல பொருள்களில் கிரேக்க நாட்டுச் சாடிகளும் கிடைத்தன. அந்தச் சாடிகள் உரோம் தேசத்தில் செய்யப்பட்டவை. அக்காலத்தில் யவனர் மதுபானங்களை வைப்பதற்காக உபயோகப் பட்டவை. யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல் என்று சங்கச் செய்யுள் கூறியதற்குச் சான்றாக இந்த யவனச் சாடிகள் உள்ளன. பாலாறு கடலில் கலக்கும் இடத்தில் தொல்பொருள் ஆய்வாளர் நிலத்தை அகழ்ந்து பார்த்த போது அவ்விடத்தில் கிடைத்த பொருள்களுடன் யவனருடைய மதுச் சாடிகளும் கண்டெடுக்கப்பட்டன. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் செய்யப்பட்ட இந்த மதுச்சாடிகளுக்கு அம்பொரே (Amphorae) என்பது பெயர். வட இந்திய அரசர்களும் யவன மதுவை வாங்கியுண்டனர். அசோக சக்கரவர்த்தியின் தந்தையான பிந்துசார மன்னன் யவன மதுவை வரவழைத்து அருந்தினான் என்று கூறப்படுகின்றது.

அரசர், வீரர், புலவர், மாலுமிகள், உழவர் முதலான எல்லா வகையான மக்களும் அக்காலத்தில் மது அருந்தினார்கள். அந்த மது வகைகள் தமிழ்நாட்டிலே உற்பத்தியாகி உள்நாட்டிலேயே விற்பனை ஆயின. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகவில்லை கள்ளையும் மதுவையும் விற்றவர் பெண்டிர்.