பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு113

வளர்ந்தன. `கறி வளர் சாந்தம்’ (அகம், 2:6) மலைகளில் மிளகுக் கொடி வளர்ந்தது. `கறி வளர் அடுக்கம்’ (குறும், 288:1) (அடுக்கம் - மலை) கருவூர் கதப் பிள்ளைச் சாத்தனாரும் `கறிவளர் அடுக்க’த்தைக் கூறுகிறார். (புறம் 168:2) `கறிவளர் சிலம்பை’ ஆகூர் மூலங் கிழார் கூறுகின்றார். (அகம் 112:14) (சிலம்பு - மலை) மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார், `துறுகல் நண்ணிய கறியிவர் படப்பை’யைக் கூறு கிறார். (அகம் 272 : 10) (படப்பை - தோட்டம்) நக்கீரர் திருமுரு காற்றுப்படையில் (அடி 309) கறிக்கொடியைக் கூறுகின்றார்.

மிளகாய் இல்லாத அந்தக் காலத்திலே மிளகு உணவுக்கு மிகவும் பயன்பட்டது. உப்பு எவ்வளவு இன்றியமையாததோ அவ்வளவு இன்றியமையாத பொருளாக மிளகு இருந்தது. காய்கறிகளை உணவாகச் சமைத்த போது அதனுடன் கறியை (மிளகை)யும் கறிவேப்பிலையையும் பயன்படுத்தினார்கள்.

‘பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளைஇ’

என்று பெரும்பாணாற்றுப்படை (வரி 307, 308) கூறுகின்றது. நமது நாட்டில் மட்டுமன்று. உலகத்திலே மற்ற நாடுகளிலும் மிளகு தேவைப்பட்டது. ஆகவே மிளகு வாணிகம் மிகச் சிறப்பாக நடந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளையடுத்த சேர நாட்டிலும் துளு நாட்டிலுமே மிளகு உண்டானபடியால் இந்த இடங்களிலிருந்தே மிளகு மற்ற எல்லா நாடுகளுக்கும் சென்றது. பாண்டிநாடு, சோழ நாடு, கொங்குநாடு, தொண்டை நாடு முதலான தமிழகத்து நாடுகளுக்குத் தமிழகத்துக்கு அப்பால் வடக்கேயுள்ள பாரத தேசத்து நாடுகளுக்கும், பாரசீகம் எகிப்து உரோமாபுரி கிரேக்கம் முதலான தேசங்களுக்கும் சேர நாட்டு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. தமிழகத்தின் மேற்குக் கரை யோரங்களில் விளைந்த மிளகு கிழக்குக் கரையோரத்திலிருந்த காவிரிப்பூம்பட்டினத்துக்கும் வண்டிகளிலும் பொதி மாடு பொதி கழுதைகளிலும் கொண்டு வரப்பட்டது. காலின் வந்த கருங்கறி மூடை என்று இதனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் கூறு கிறார் (பட்டினப் பாலை, அடி 186) (கால் - வண்டி, பொதிமாடு முதலியன. கறி மூடை = மிளகு மூட்டை) (வணிகச் சாத்து - வணிகக் கூட்டம்). மிளகுப் பொதி களைக் கழுதைகளின் முதுகின் மேல் ஏற்றிக் கொண்டு நெடுஞ்சாலை வழியே சென்றதையும் மிளகு மூட்டைகள் பலாக்காய்