| பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 167 |
இதில் “சீர்த்தகு மரபில் பெரும்படை” என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை பொருந்தாது. இளம் பூரணர் கூறும் உரை சரியானது. இதற்கு இளம் பூரணர் கூறும் உரை இது: சீர்தகு மரபின் பெரும்படை - மிகவும் தக்க மரபினையுடைய பெரும்படை, அஃதாவது, நாட்டிய கல்லிற்குக் கோட்டஞ் செய்தல். அஃது இற்கொண்டு புகுதலென உரைத்த துறை. இவ்வுரையிலும் முழு விளக்கம் தரப்படவில்லை. நாட்டிய கல்லிற்குக் கோட்டம் (கோவில்) அமைத்தல் என்று பொதுவாகச் சொல்லியிருக்கிறார். பெரும்படை என்பது, அரசர்கள் போர்க்களத்தில் உயிர் நீத்தால் அவர்களுக்கு நடுகல் நட்டு அக்கல்லுக்குமேல் கோவில் (கோட்டம்) கட்டடம் அமைத்தல் என்பது பொருள். சாதாரண போர் வீரர்களுக்குக் கோட்டம் இல்லாத வெறும் நடுகல்லும், அரசர்களுக்குப் பெரும்படை என்னும் கோட்டமும் அமைக்கும் வழக்கத்தை இது அறிவிக்கிறது. பெரும்படை என்பதற்குச் சாசனங்களில் பள்ளிப்படை என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது. போர்க்களத்தில் இறந்த அரசருக்குப் பெரும்படையாகிய பள்ளிப்படை அமைக்கும் வழக்கம் உண்டென்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுவதற்கு ஏற்பவே, சாசனச் சான்றும் கிடைக்கின்றது. அது வருமாறு: “ஸ்ரீ கோவிராஜ கேசரி பன்மரான ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு 29-ஆவது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் பெருபாணப்பாடி தூநாட்டு மேற்பாடி யாகிய ராஜாஸ்ரயபுரத்து நகரத்தோம் ஆற்றூர்த் துஞ்சினதேவர்க்குப் பள்ளிப்படையாக உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் எங்கள் நகரத்தில் எடுப்பித்தருளின திரு அருஞ்சிகை ஈஸ்வரத்து மகாதேவர் கோயில்”.1 இந்தச் சாசனத்தில் கூறப்படுவது என்ன வென்றால்: அருஞ்சிகை என்னும் பெயருள்ள ராஜராஜ சோழன் (முதலாவன்) இவ்வூரில் பகைவரோடு போராடுகையில் போர்க்களமாக இருந்த ஆற்றங்கரையில் மாண்டு போனான். அதன் காரணமாக ஆற்றூர்த் துஞ்சிய தேவர் என்று அவனுக்குப் பெயர் உண்டாயிற்று. அவன் இறந்த இடத்தில் நடுகல்லுக்குப் பதிலாகப் பள்ளிப்படை (பெரும்படை) யாகக் கோவில் கட்டப்பட்டது என்பதாம். |