பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 175 |
வுள்ளது என்பது பெறப்படுகிறது. இப்பட்டினம் நீண்ட சதுரமாக அமைந்திருந்தது என்பதைச் சிலப்பதிகாரம், 5வது காதையிலிருந்து குறிப்பாக அறிகிறோம். கிழக்கு மேற்காக நீண்டும், வடக்குத் தெற்காக அகன்றும் இப்பட்டினம் அமைந்திருந்தது. மணல் பரந்த கடற்கரை, நெய்தலங்கானல் என்று பெயர் பெற் றிருந்தது. நெய்தலங்கானலுக்கு மேற்கே காவிரிப்பூம்பட்டினம் இருந்தது. இப்பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்று இரண்டு கூறாக இருந்தது. மருவூர்ப் பாக்கத்துக்கும் பட்டினப்பாக்கத் துக்கும் இடை நடுவே ஒரு பெரிய தோட்டம் இருந்தது. இந்தத் தோட்டத்தில் பகல் வேளையில் பண்டங்கள் விற்கப்பட்டன. ஆகவே இந்த இடம் நாளங்காடி என்று பெயர் பெற்றிருந்தது. இனி, இப்பட்டினத்தின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே பார்ப்போம். நெய்தலங்கானல் இது கடற்கரையைச் சார்ந்த மணல் பரந்த இடம். நெய்தலங் கானலில் சோமகுண்டம், சூரிய குண்டம் என்னும் இரண்டு குளங்களும் காமவேள் கோவிலும் இருந்தன. இந்தக் குளங்களில் நீராடிக் காமவேளை வழிபடும் மங்கையர் இம்மையில் கணவனைப் பெற்று இன்பந் துய்த்துப் பின்னர் மறுமையில் போகபூமியில் போய்ப் பிறப்பார்கள் என்று அக்காலத்துப் புகார்ப் பட்டினத்து மக்கள் நம்பினார்கள். ‘கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில் மடலவிழ் நெய்தலங் கானல் தடமுள சோம குண்டம் சூரியகுண்டம் துறைமூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு தாமின் புறுவர் உலகத்துத் தையலார் போகஞ்செய் பூமியிலும் போய்ப் பிறப்பர்’ என்று சிலம்பு (9ஆம் காதை 57-62) கூறுகிறது. நெய்தலங்கானலில் இருந்த சோமகுண்டம் சூரிய குண்டங்களை, ‘இருகாமத்து இணை ஏரி’ என்று பட்டினப்பாலை கூறுகிறது. உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதை இவ்வாறு விளக்குகிறார். ‘இம்மையிலும் மறுமையிலும் உண்டாகிய காமவின்பத்தினைக் |