176 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
கொடுத்தற்குரிய இணைந்த ஏரிகள். இனி, வளகாமரேரி, வணிகாமரேரி என்றும் சங்கிராமகாமம் வணிக்கிராமகாமம் என்றும் உரைப்ப”. காவிரிப்பூம் பட்டினத்தில் ஆண்டுதோறும் இருபத்தெட்டு நாட்கள் நிகழ்ந்த இந்திர விழாவின் இறுதியில் நகர மக்கள் இந்த நெய்தலங்கானலுக்கு வந்து எழினிகளால் அமைந்த கூடாரங்களில் தங்கிக் கடலில் நீராடிச் செல்வது வழக்கம் என்று சிலம்பு, கடலாடு காதையினால் அறிகிறோம். மருவூர்ப்பாக்கம் கடற்கரையாகிய நெய்தலங்கானலை அடுத்துப் புகார்ப்பட்டினத்தின் ஒரு பகுதியாகிய மருவூர்ப்பாக்கம் இருந்தது. மருவூர்ப் பாக்கத்தின் தெற்கே காவிரிக் கரையில், துறைமுகமும் ஏற்றுமதி இறக்குமதிப் பண்டங்களை வைக்கும் பண்டகசாலையும் இருந்தன. மருவூர்ப்பாக்கத்தில் மீன் பிடிக்கும் பரதவர், கப்பலோட்டிகள், உப்பு வாணிகர், தச்சர், கருமார், கன்னார், பொற்கொல்லர்; பாணர், கூல வாணிகர் முதலியோர் குடியிருந்தனர். அக்காலத்தில் தமிழ்ச் சமூகம் சிறுகுடி என்றும் பெருங்குடி என்றும் இது பெரும் பிரிவாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இப்பிரிவு, நகரங்களிலே சிறப்பாக இருந்தது. சிறுகுடி என்பது செல்வந்தர் அல்லாத சாதாரண மக்களும் தொழிலாளரும் அடங்கிய பிரிவு. மருவூர்ப்பாக்கத்தில் வசித்தவர் சிறுகுடி மக்களாகிய தொழிலாளரும் சாதாரண மக்களுமாவர். மருவூர்ப்பாக்கத்தில் வசித்திருந்தவர்களைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது: ‘பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலங் குவித்த கூல வீதியும் காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர் மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர் பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோடு ஓசுநர் செறிந்த வூன்மலி இருக்கையும் கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் மரங்கொஃறச்சருங் கருங்கைக் கொல்லரும் கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும் பொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும் |