பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு177

துன்ன காரரும் தோலின் றுன்னரும்
கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கிப்
பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழலினும் யாழினுங் குரன்முத லேழும்
வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறன்மரபில் பெரும்பா ணிருக்கையும்
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுவின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்’

(இந்திரவிழவூரெடுத்த காதை, 22-39)

இதனால் மருவூர்ப்பாக்கத்தில் தொழிலாளர் முதலிய சிறுகுடி மக்கள் இருந்தனர் என்பது தெரிகின்றது. மருவூர்ப்பாக்கத்திலேதான் சோழமன்னனுடைய படை வீரர்களும் இருந்தார்கள். இதனை, ‘மருவூர் மருங்கின் மறங்கொள் வீரர்’ என்று சிலம்பு 5ஆம் காதை 76ஆம் அடியினால் அறிகிறோம்.

அன்றியும் வெளிநாடுகளில் இருந்து கப்பல் ஓட்டிக்கொண்டு புகார்த் துறை முகத்துக்குவந்த மாலுமிகள் - யவனர் முதலியோர், மருவூர்ப் பாக்கத்தின் தென் பகுதியில் துறைமுகத்துக்கு அருகில் தங்கி யிருந்தனர் என்பதும் தெரிகின்றது. இதனை,

‘கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பும்’

என்றும், (சிலம்பு - இந்திரவிழவூர் 9-12)

‘மொழிபெயர் தேத்தோர் ஒழியா விளக்கமும்’

என்றும், (சிலம்பு - கடலாடு 143ஆம் அடி) கூறுவதிலிருந்து அறிகிறோம். இதனையே,

‘மொழிபல பெருகிய பழிதீர் தேஏத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்’

என்று பட்டினப்பாலை (216-218) கூறுகின்றது.