பக்கம் எண் :

178மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

பட்டினப்பாக்கம்

மருவூர்ப்பாக்கத்துக்கு மேற்கே பட்டினப்பாக்கம் இருந்தது. காவிரிப்பூம்பட்டினத்தின் முக்கிய பகுதி இதுவே. இப் பட்டினப்
பாக்கத்தைச் சூழ்ந்து நாற்புறமும் நன்னீர் அகழி இருந்தது. பட்டினப்
பாக்கத்தின் தெற்கே காவிரி ஆறும், மற்ற மூன்று பக்கங்களிலும் அகழியாகிய கிடங்கும் இருந்தன. அகழிக்கு உட்புறத்தில் கோட்டை மதிலும், சோழ மன்னனுடைய அரண்மனையும், நகர மக்கள் வாழ்ந்த வீதிகளும், அரண்மனைக்கு எதிரிலே இரண்டு பக்கத்திலும் தருநிலை, வச்சிர நிலை என்னும் இரண்டு கோட்டங்களும் இருந்தன.

இதனை மணிமேகலை (5ஆம் காதை 109-118 அடிகள்) நன்கு விளக்குகின்றது.

‘புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி
பன்மலர் சிறந்த நன்னீர் அகழிப்
புள்ளொலி சிறந்த தெள்ளரிச் சிலம்படி
ஞாயில் இஞ்சி நகைமணி மேகலை
வாயின் மருங்கியன்ற வான்பணைத் தோளி
தருநிலை வச்சிரம் எனவிரு கோட்டம்
எதிரெதிர் ஓங்கிய கதிரிள வனமுலை
ஆர்புனை வேத்தற்குப் பேரள வியற்றி
யூழி யெண்ணி நீடுநின் றோங்கிய
ஒருபெருங் கோயிற் றிருமுக வாட்டி’

என்னும் அடிகளினால் இதனை அறிகிறோம்.

இதனால், சோழ மன்னனுடைய அரண்மனை உயரமான பெரிய கட்டடமாகவும், அதற்கு எதிரிலே இரண்டு பக்கத்திலும் இருந்த தருநிலை, வச்சிரநிலை என்னும் கோட்டங்கள் அரண்மனையைவிடச் சிறிய கட்டடங்களாகவும் இருந்தன என்பது தெரிகின்றது. (சங்க காலத்திலே கோவில் கட்டடங்கள் அரண்மனைகளை விடச் சிறியவாக இருந்தன. பிற்காலத்திலே தான் கோவில் கட்டடங்கள் உயரமாக அமைக்கப்பட்டன.)

பூம்புகார் நகரத்தின் கோட்டை வாயில் உயரமாகவும், மேற்புறம் மகர உருவம் உள்ள சிற்பம் அமைந்ததாகவும் இருந்தது என்று பரணர் என்னும் புலவர் (அகம் 181-ஆம் செய்யுள்) கூறுகிறார்.