பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 179 |
‘மகர நெற்றி வான்றோய் புரிசைச் சிகரந் தோன்றாச் சேணுயர் நல்லில் புகாஅர் நன்னாடு’ என்பது அச்செய்யுள் வாசகம். நகர மக்களின் போக்குவரத்துக் குரியதாக இருந்த இந்தக் கோட்டை வாயிலை, ‘மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும் உலக இடைகழி’ என்று சிலப்பதிகாரம் (நாடுகாண் 26-27) கூறுகிறது. கோட்டை வாயிலின் கதவிலே சோழ மன்னனுடைய அடையாளமாகிய புலியின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததைப் பட்டினப்பாலை கூறுகிறது. ‘புலிப் பொறிப் போர்க் கதவிற் திருத் துஞ்சும் திண்காப்பு’ என்று கூறுகிறது. பட்டினப்பாக்கத்திலே, சோழ மன்னனுடைய அரண்மணை, காவிரி ஆற்றின் வடகரையிலே இருந்தது. அரண்மனையைச் சார்ந்து இராசவீதியும் பெருநிலக்கிழார் பெருங்குடி வாணிகர் தெருக்களும் பீடிகைத் தெருக்களும் அமைச்சர் படைவீரர் மறையோர் முதலியவர் வாழ்ந்திருந்த தெருக்களும் இருந்தன. பட்டினப்பாக்கத்திலே பெருங்குடி மக்களான செல்வந்தர் வாழ்ந்தனர். (மருவூர்ப்பாக்கத்தில் சிறுகுடி மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதை முன்னமே கூறினோம்) கணிகையரில் சிறுதனக்கணிகையர் மருவூர்ப் பாக்கத்திலும் பெருந் தனக்கணிகையர் பட்டினப்பாக்கத்திலும் இருந்தனர். சிறுகுடியினராகிய போர்வீரர் மருவூர்ப் பாக்கத்திலும், படைத்தலைவராகிய பெருங்குடி மக்கள் பட்டினப்பாக்கத்திலும் வாழ்ந்திருந்தார்கள். இதனை, ‘கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர் மாட மறுகும் மறையோர் இருக்கையும் வீழ்குடி யுழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும் காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை யிருக்கையும் திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொ டணிவளை போழுநர் அகன்பெரு வீதியும் சூதர் மாகதர் வேதாளிக ரொடு |