பக்கம் எண் :

206மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

உய்யானம்:

உய்யானம் என்னும் பூஞ்சோலை ஒன்று இருந்தது. இது அரசனுக்கு உரிய பூங்கா. அரண்மனையைச் சார்ந்து இருந்தது.

பெருந்துறை:

வையை ஆற்றைக் கடந்து மதுரை மாநகரத்துக்குப் போக ஆற்றில் பாலம் அமைந்திருக்கவில்லை. ஆற்றைக் கடக்க ஓடங்கள் இருந்தன. இந்த ஓடங்களின் முன்புறத்தில் யானை முகம், குதிரை முகம், சிங்க முகங்களின் உருவங்கள் அமைந்திருந்தன. ஓடங்களில் ஏறி ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு மக்கள் சென்றனர்.

‘பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும்
அரிமுக வம்பியும் அருந்துறை இயக்கும்
பெருந்துறை’

என்று சிலம்பு (புறவஞ்சி : 176 - 78) கூறுகிறது.

புறஞ்சேரி :

கோட்டை மதிலுக்கும் காவற் காட்டுக்கும் வெளியே புறஞ்சேரி இருந்தது. புறஞ்சேரியில் தவசிகள் மட்டும் தங்கியிருந்தார்கள்.

‘அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர்’

என்று சிலம்பு (புறஞ்சேரி. 195 - 196) கூறுகிறது.

மதுரை நகரம் எறிந்ததா?

மதுரைமா நகரத்தைக் கண்ணகியார் எரியூட்டி அழித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பலரும் அப்படித்தான் கருதுகிறார்கள். நகர் அல்லது நகரம் என்பதற்குப் பட்டணம் என்றும் அரண்மனை என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன. நகரம் எரியுண்டது,