பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 223 |
தூர்ந்து ஆழமில்லாமற் போனபடியால், யவனரின் பெரிய கப்பல்கள் துறைமுகத்துக்குள் வரமுடியாமற் போனதை முன்னமே கண்டோம். பெரியாற்றில் எப்போதும் வெள்ளம் இருந்தது என்பதைச் சங்கச் செய்யுட்களிலிருந்து அறிகிறோம். கோடை நீடக் குன்றம் புல்லென அருவியற்ற பெருவறற் காலையும் நிவந்து கரையிழிதரு நனந்தலைப் பேரியாறு என்று பாலைக் கவுதமனார் பாடினார்.51 ‘புனல் பேரியாறு’ என்று பெருங்குன்றூர் கிழார் பாடினார்.52 வறண்ட காலத்திலும் பேரியாற்றில் வெள்ளம் பாய்ந்தோடியது என்றும் அந்த வெள்ளம் கரைகளை உடைத்துப் பக்கங்களில் பரவிற்று என்றும் பரணர் பாடினார். குன்று வறங்கூரச் சுடர்சினந்திகழ அருவியற்ற பெருவறற் காலையும் அருஞ்செயற் பேராறு இருங்கரையுடைத்து53 ஆற்று வெள்ளம் இரு கரைகளிலும் வழிந்து பாய்ந்தது என்று கூறுகிற படியால், ஆறே காலப்போக்கில் மணல் தூர்ந்து ஆழமில்லாமற் போயிற்று என்று தெரிகிறது. இவ்வாறு மணல் தூர்ந்து ஆழமில்லமற் போன பேரியாறு, கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் ஓராண்டில் பெரும் மழை பெய்து வெள்ளப் பெருக்கெடுத்தது. அப்போது கடலும் கொந்தளித்து அலைபொங்கியது. அதனால், முசிறிப் பட்டினமும் அதனைச் சார்ந்த கடற்கரை ஊர்களும் கடலில் மூழ்கி, மறைந்து போயின. சேரநாட்டு வஞ்சிநகரமும் முசிறிப்பட்டினமும் பிற்காலத்தில் மறைந்துபோயின. மறைந்துபோன அந்த நகரங்களைப் பற்றின செய்திகளைச் சங்க காலத்து நூல்களும் சங்கச் செய்யுட்களும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. இந்நூல்களின் உதவியினால் மறைந்துபோன அந்த நகரங்களின் அமைப்புகளை ஒருவாறு படம் எழுதிப் பார்க்கிறோம். |