பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு243

விட்ட பிறகு, ஏழில் மலை தமிழகத்தின் வடவெல்லையைக் குறிக்காமற் போயிற்று. ஆனால், சங்க காலத்தில் தமிழகத்தின் மேற்குக் கரையில் வடவெல்லையாக இருந்தது ஏழில்மலை என்பது நன்கு தெரிகின்றது.

பண்டைத் தமிழ்நாட்டின் வடவெல்லை கீழ்ப்புறமாக வேங்கட மலையும், மேற்புறமாக ஏழிற்குன்றமும் என அறிந்தோம். இனி, இந்த இரண்டு மலைகளுக்கும் இடையே உள்ள நாடுகளில் வடவெல்லை யாக இருந்தவை .......... என்பதையும் ஆராய்வோம். இதனையும் மாமூலனார் விளக்குகின்றார்.

“குல்லைக் கண்ணி வடுகர் முனையது
    பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
    மொழிபெயர் தேயம்!”                    (குறும்.....)

என்று கட்டி என்னும் சிற்றரசனது நாடு தமிழ்நாட்டின் வடவெல்லை யாக இருந்ததென்றும், அவனது நாட்டுக்கப்பால் வேறு மொழி பேசப்படும் தேயம் இருந்ததென்று அவர் கூறுகின்றார். அகநானூறு 44ஆம் பாட்டில் சோழனுக்கும் சேரனுக்கும் நடந்த போரில் பல சிற்றரசர்கள் சேரனுக்கு துணையாக இருந்தனர் என்றும், அவர்களுள் கட்டி என்ப வனும் ஒருவன் என்றும் அறியக் கிடைக்கின்றது. குறுந்தொகை கூறும் கட்டியும், அகநானூறு கூறும் கட்டியும் ஒருவனே என்பது ஆராய்ச் சியில் விளங்குகின்றது. கட்டியரசர் கொங்கு நாட்டின் பகுதியை ஆண்டனர்.

அன்றியும், சேரனுக்கு உதவியாகச் சென்றவர்களுள் கங்கன் என்பவனும் கூறப்படுகின்றான் (அகம்.....) இந்தக் கங்கன் என்பவனும் தமிழ் நாட்டின் வடவெல்லையில் இருந்த நாட்டினை அரசாண்ட ஒரு சிற்றரசன் ஆவான். சிலப்பதிகாரம் கட்டி, கங்கன் என்பவர்களைக் கட்டி கங்கர் என்று இரண்டு குழுவினராகக் கூறுகின்றது. பங்களர் என்பவர் பங்கள நாட்டை ஆண்டனர். பங்கள நாடு இப்போதை சித்தூர், வட ஆர்க்காடு மாவட்டங்களில் இருந்தது. இது வங்காள நாடு என்னும் வங்கம் அன்று. சிலப்பதிகாரம், காட்சிக் காதை 157ஆம் அடியில் “பங்களர் கங்கர் பல்வேற்கட்டியர்” என்று பங்களரைக் கூறுகிறது. பங்களரும் தமிழகத்தின் வடவெல்லையில் இருந்தனர். பங்களர், கங்கர், கட்டியர் ஆகிய இவர்கள் தமிழ் நாட்டின் வடவெல்லையில் இருந்தவர் என்பதற்குச் சாசனச் சான்றுகள் உள்ளன.