பக்கம் எண் :

256மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

சூர்ணியாறு என்பது பெரியாற்றின் வடமொழிப் பெயர். மருத்விருத ஆறு என்றும் இதற்குப் பெயர் உண்டு. பெரியாற்றைப் பேரியாறு என்று சங்க நூல்கள் கூறுகின்றன. இந்த பேரியாற்றின் கரையிலே சேரன் செங்குட்டுவன் தன் சுற்றத்துடன் தங்கி இயற்கைக் காட்சியைக் கண்ட செய்தியைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

“நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப”

என்பது சிலப்பதிகாரம். (காட்சிக்காதை. 21-23)

எனவே, இவ் வுரையாசிரியர் கூறுகிற முரசி, முசிறித் துறைமுகம் என்பதும் சூர்ணியாறு பெரியாறு என்பதும் ஐயமற விளங்குகின்றன. பெரியாறு கடலில் கலக்கிற இடத்துக்கு அருகிலே சேரனுடைய தலை நகரமான வஞ்சியும் அதற்கு அருகில் முசிறியும் இருந்தன. வஞ்சிமா நகரத்துக்கு அருகில் இருந்தவை கொடுமணம், பந்தர் என்னும் ஊர்கள். பந்தர் என்னும் ஊரிலேதான் முத்துக் குளிக்கும் சலாபம் இருந்தது.

பந்தர் என்னும் பெயர் அரபிச் சொல். பந்தர் என்னும் அரபிச் சொல்லுக்கு அங்காடி அல்லது கடைத்தெரு என்பது பொருள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே யவனராகிய கிரேக்கர் தமிழ் நாட்டுடன் வாணிகம் செய்ய வந்தார்கள். யவனர் வருவதற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்னரே அராபியர் தமிழகத்துடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந் தனர். அவர்கள் இந்த இடத்துக்குப் பந்தர் என்று பெயர் சூட்டியிருக்கலாம்.

சேர நாட்டில் உண்டான முத்துக்குக் கௌர்ணேயம் என்று ஏன் பெயர் வந்தது? இது பற்றி ஒருவரும் ஆராய்ச்சி செய்யவில்லை. கௌர் ணேயம் என்பது சௌர்ணேயம் என்னும் சொல்லின் திரிபு என்று தெரிகிறது. சௌர்ணேயம் என்றால், சூர்ணியாற்றில் தோன்றியது என்பது பொருள். சூர்ணியாறு கடலில் கலக்கிற இடத்தில் உண்டானபடியினால் அந்த முத்துக்களுக்குச் சூர்ணேயம் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம். வடமொழி இலக்கணப்படி சூர்ணேயம் சௌர்ணேயம் ஆயிற்று. பிறகு சகரம் ககரமாக மாறிற்று. சேரம் கேரம் (சேரலன் - கேரளன்) ஆனது போல. தாமிரபரணி ஆறு கடலில் கலக்கிற புகர் முகத்தில் கடலில் உண்டாகிற முத்துக்குத் தாம்ரபர்ணிகம் என்று பெயர் ஏற்பட்டது போல,