பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு257

சூர்ணி ஆறு கடலிற் கலக்கிற புகர்முகத்தில் உண்டான முத்துக்குச் சௌர்ணேயம் என்று பெயர் உண்டாயிற்று என்று கருதலாம்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்தவராகக் கருதப்படுகிற கவுடல்லியர் தமது அர்த்தசாஸ்திரத்திலே சேர நாட்டில் முத்து உண்டா னதைக் கூறியுள்ளார். கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்தவராகக் கருதப் படுகிற கபிலரும், அரிசில் கிழாரும் சேர நாட்டில் பந்தர் என்னும் பட்டி னத்தில் முத்துக் குளிக்கும் இடம் இருந்ததைப் பதிற்றுப்பத்தில் கூறி யுள்ளனர். இவற்றிலிருந்து இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சேர நாட்டில் முத்துச் சலாபம் இருந்த செய்தி தெரிகிறது.

சேர நாட்டின் தலைநகரமாயிருந்த வஞ்சிமா நகரமும் (இதற்குக் கருவூர் என்றும் கரூர்ப்பட்டணம் என்றும் வேறு பெயர் உண்டு. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இப்போது இருக்கின்ற கருவூர் (கரூர்) அன்று கருவூர்ப்பட்டினமாகிய வஞ்சிமாநகரம்) சேர நாட்டின் துறைமுகப்பட்டினமாக இருந்த முசிறியும் கொடுமணம், பந்தர் என்னும் ஊர்களும் அடுத்தடுத்துக் கடற்கரை ஓரமாக இருந்தன. கொடுமணம் பந்தர் என்னும் ஊர்கள் வஞ்சிமா நகரத்துடன் இணைந்திருந்த ஊர்கள் என்று தெரிகின்றன. இந்தப் பட்டினங்களும் ஊர்களும் பிற்காலத்தில் மறைந்துவிட்டன. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, கி.பி. 1341-ல் பெய்த பெரு மழையினாலே, பெரியாறு வெள்ளம் தாங்கமாட்டாமல் கரைவழிந் தொடிப் பல இடங்களை அழித்துவிட்டது. அதனால், பழைய நில அமைப்புகள் மாறியும் அழிந்தும் போகப் புதிய காயல்களும் கழிகளும் தோன்றிவிட்டன.

சேர நாட்டின் தலைநகரமான பழைய வஞ்சி மூதூர் (கருவூர்), இப்போது கொடுங்ஙலூர் (ஆங்கிலத்தில் cranganur) என்னும் பெயருடன் ஒரு சிறு கிராமமாகக் காட்சியளிக்கிறது. பழைய துறை முகமாகிய முசிறி மறைந்து போயிற்று. பிற்காலத்தில் கடற்கரை ஓரமாகப் புதிதாக அமைந்த நீர்நிலைப் பகுதியில் இப்போது கொச்சி துறைமுகம் காட்சியளிக்கிறது. பழையன கழிந்து புதியன புகுந்தன. ஆனால், பழைய இலக்கியங்கள் பழைய சிறப்புக்களை நினை வுறுத்திக் கொண்டிருக்கின்றன.