பக்கம் எண் :

32மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

(நறவு - மது; நெல்லின் நாண்மகிழ் - நெல்லரிசியினால் உண்டாக்கப் பட்ட மது)

வேடர் தேனையும் கிழங்கையும் கொண்டு வந்து மதுபானக் கடையில் மாற்றி அதற்கு மாறாக வறுத்த மீன் இறைச்சியையும் மதுவையும் வாங்கி உண்டதையும், உழவர் கரும்பையும், அவலையும் கொண்டு வந்து கொடுத்து அதற்கு மாறாக வறுத்த மான் இறைச்சியையும் மதுவை யும் பெற்று உண்டு மகிழ்ந்ததையும் முடத்தாமக்கண்ணியார் கூறுகிறார்.

‘தேனெய்யொடு கிழங்கு மாறியோர்
மீனெய்யொடு நறவு மறுகவும்
தீங்கரும்பொடு அவல் வகுத்தோர்
மான்குறையோடு மது மறுகவும்’

(பொருநர் ஆற்றுப்படை, 214-217)

(தேன்நெய் - தேன். மாறியோர் - மாற்றினவர்கள். மீன்நெய் - வறுத்த மீன். நறவு - மது, கள். மான்குறை - மான் இறைச்சி)

கொற்கைக் குடாக் கடலின் கரையோரங்களில் வாழ்ந்த பரதவர், கொற்கைக் கடலில் மீன்பிடித்த போது அதனுடன் முத்துச் சிப்பிகளும் கிடைத்தன. அந்தச் சிப்பிகளை அவர்கள் கள்ளுக் கடையில் மாற்றிக் கள் குடித்ததைப் பேராலவாயர் கூறுகிறார்.

‘பன்மீன் கொள்பவர் முகந்த சிப்பி
நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
பேரிசைக் கொற்கை’                    (அகம், 296: 8-10)

(இப்பி - முத்துச் சிப்பி)

குறிப்பு : பாண்டி நாட்டிலிருந்த பேர் போன கொற்கைக் குடாக் கடல் பிற்காலத்தில் மணல் தூர்ந்து மறைந்து போய்விட்டது.

எயினர் மது அருந்துவதற்காக மது விற்கும் இடத்துக்கு வந்து எந்தப் பொருளும் இல்லாதபடியால், ‘காட்டில் வேட்டை யாடி யானைத் தந்தங்களைக் கொண்டு வந்து கொடுப்போம். அதற்கு ஈடாக இப்போது கள்ளைக் கடனாகக் கொடு’ என்று கேட்டதை மருதன் இளநாகனார் கூறுகிறார்.

‘அரிகிளர் பணைத்தோள் வயிறணி திதலை
அரிய லாட்டியர் அல்குமனை வரைப்பின்