பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு | 31 |
விழவயர் மறுகின் விலையெனப் பகரும் கானலஞ் சிறுகுடி’ (அகம், 320:2-5) மீனை நெல்லுக்கு மாற்றினார்கள், பண்ட மாற்றினால் கிடைத்த நெல்லை அம்மியில் ஏற்றிக் கொண்டு கழிகளின் வழியே வந்ததைப் பரணர் கூறுகிறார். ‘மீன் நொடுத்து நெல் குவைஇ மிசை அம்பியின் மனைமறுக்குந்து’ (புறம், 343:1-2) உழவர் மகளிர் தெருக்களில் பூ விற்றதைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ கூறுகிறார். ‘துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி வாலிதழ் அலரி வண்டுபட ஏந்திப் புதுமலர் தெருவுதொறும் நுவலும் நொதுமலாட்டி’ (நற்றிணை, 118: 8-11) (துகிலிகை - ஓவியர் வண்ணங்களைத் தொட்டு எழுதும் கோல் (Brush); பாதிரி - பாதிரிப்பூ. அலரி - அலரிப்பூ) பெண் ஒருத்தி மலர் விற்றதைப் பாண்டியன் மாறன் வழுதி தம்முடைய செய்யுளில் கூறுகிறார். ‘துய்த்தலை இதழபைங் குருக்கத்தியொடு பித்திகை விரவுமலர் கொள்ளீரோ என வண்டு சூழ் வட்டியள் திரிதரும் தண்டலை யுழவர் தனிமடமகள்’ (நற்றிணை, 97:6-9) பூ விற்ற பெண்களும் பூவை நெல்லுக்குப் பண்டமாற்று செய்தனர் என்பதைச் சொல்லாமலே விளக்குகிறது. வேடர்கள் ஒன்றுகூடிக் காட்டில் வேட்டையாடிக் கொன்ற யானையின் தந்தங்களை மதுபானக் கடையில் கொண்டு போய்க் கொடுத்து மதுபானம் அருந்தினதை மாமூலனார் கூறுகிறார். ‘வரி மாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும்’ (அகம், 61:8-10) |