பக்கம் எண் :

30மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

ஊர்த் தெருக்களில் உப்பு விற்ற உமணப் பெண் உப்பை நெல்லுக்கு மாற்றினதை அம்மூவனார் கூறுகிறார்.

‘கதழ்கோல் உமணர் காதல் மடமகள்
சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரிவிலை மாறு கூறலின்’ .                   (அகம். 140: 5-8)

(சேரி - தெரு; விலைமாறு - பண்டமாற்று)

‘நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளிரோவெனச் சேரிதொறும் நுவலும்’                   (அகம், 390: 8-9)

உப்பை நெல்லுக்கு மாற்றிய உப்பு வாணிகர் தமக்குக் கிடைத்த நெல்லைச் சிறு படகுகளில் ஏற்றிக் கொண்டு கழிகளில் ஓட்டிச் சென்றதைக் கடியலூர் உருத்திரன் கண்ணனார் கூறுகிறார்.

‘குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி’

என்று (பட்டினப்பாலை 28-30) அவர் கூறுகிறார். உப்பை நெல்லுக்கு மாற்றியதை உலோச்சனார் கூறுகிறார். ‘உமணர் தந்த உப்பு நொடை நெல்’ (நற்றிணை, 254:6)

கடற்கரையோரத்திலே நெய்தல் நிலத்தில் வசித்த பரதவர் கடலிலே சென்று சுறா, இறால் முதலான மீன்களைப் பிடித்து வந்தார்கள். அவர்கள் கொண்டுவந்த மீனைப் பரதவ மகளிர் எளிதில் தானியத்துக்கு மாற்றினார்கள் என்று குன்றியனார் கூறுகிறார். ‘இனிது பெறு பெருமீன் எளிதினில் மாறி’ (நற்றிணை, 239:3) பரதவர் மகளிர் கடல் மீனை நெல்லுக்கு மாற்றியதை நக்கீரரும் கூறுகிறார்: ‘பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத், தயிர்மிதி மிதவை யார்த்துவம்’ (அகம், 340: 14-15). ‘உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு’ என்று குடவாயில் கீரத்தனார் கூறுகிறார் (அகம் 60:4)

பரதவ மகளிர் கடல்மீனைத் திருவிழா நடக்கிற ஊர்களில் கொண்டுபோய் எளிதில் விற்றதைச் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார்,

‘திமிலோன் தந்த கடுங்கண் வயமீன்
தழையணி அல்குல் செல்வத் தங்கையர்