பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு37

பாண்டி நாட்டுக் கொற்கைக் கடலுக்கு அருகில் பரதவர் ஊருக்கு ஒருவன் அத்திரி பூட்டின வண்டியில் சென்றான் என்று சேந்தன் கண்ணனார் கூறுகிறார்.

“கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி
வடிமணி நெடுந்தேர் பூண”

(அகம், 350: 6-7)

அத்திரியை ஒருவன் ஊர்ந்து சென்றதை நக்கீரர் கூறுகிறார்.

“கழிச்சுறா வெறிந்த புட்டாள் அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ” (அகம், 120: 10-11)

கடற்கழி வழியாக ஒருத்தன் அத்திரி ஊர்ந்து வந்ததை உலோச்சனார் கூறுகிறார்.

“கழிச்சேறு ஆடிய கணைக்கால் அத்திரி
குளம்பிலும் சேயிறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே”

(நற்றிணை, 278: 7-9)

மதுரையில் வைகையாற்றில் நடந்த நீராட்டு விழாவிலே சிலர் அத்திரி யூர்ந்து வந்தார்கள் என்று பரிபாடல் (10-ஆம் பாடல் 17 - அடி கூறுகிறது)

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த செல்வக் குடிமகனாகிய கோவலன் கடலாடுவதற்குக் கடற்கரைக்குச் சென்றபோது அவன் அத்திரி ஊர்ந்து சென்றான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. (கடலாடு காதை, அடி 119). சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், ‘அத்திரி - கோவேறு கழுதை, அஃதாவது குதிரையில் ஒரு சாதி’ என்று உரை எழுதியுள்ளார். பழைய அரும்பத உரையாசிரியர், ‘இராச வாகனமாகிய அத்திரி’ என்று உரை எழுதியுள்ளார்; ஆகவே அத்திரி அக்காலத்தில் உயர்தர ஊர்தியாகக் கருதப்பட்டது என்று தெரிகிறது.

குதிரை

குதிரை வெளிநாடுகளிலிருந்து வந்ததையும், அவை போர்க் களங்களில் பயன்படுத்தப்பட்டன என்பதையும் கூறினோம். அவை வண்டியிழுக்கவும் பயன்பட்டன. குதிரை வண்டிகள் தேர் என்று கூறப்பட்டன. குதிரை வண்டிகளைச் சங்க நூல்கள் கூறுகின்றன; சிறுபாணாற்றுப்படை குதிரை வண்டியைக் கூறுகிறது. (சிறுபாண், 251-261). புலவர் உலோச்சனார் ஒருவர் குதிரை வண்டியில் வந்ததைக்