பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு53

உறங்குவதைக் கண்ட நக்கசாரணர் சிலர் வந்து அவனைக் கொல்லத் தொடங்கினார்கள். விழித்துக் கொண்ட சாதுவன், அவர்களுடைய மொழியை அறிந்தவனாகையால், தன்னைக் கொல்ல வேண்டா மென்றும் கப்பல் மூழ்கிப் போனதால் தான் அவ்விடம் வந்ததாகவும் கூறினான். தங்களுடைய மொழியில் பேசினபடியால் அவர்கள் அவனைக் கொல்லாமல் தங்களுடைய தலைவனிடம் அழைத்துக் கொண்டுபோனார்கள். சாதுவன் சில காலம் நக்கசாரணரோடு தங்கி யிருந்தான். பிறகு சந்திரத்தன் என்னும் காவிரிப்பூம்பட்டினத்து வாணிகன், சாவக நாட்டுக்குப்போய் வாணிகஞ் செய்துவிட்டுத் தன்னுடைய கப்பலில் திரும்பி வருகிறவன் நாகர்மலைத் தீவின் பக்கமாக வந்த போது, நக்கசாரணர் அவனுடைய கப்பலைத் தங்கள் தீவுக்கு அழைத்து அவனுடைய கப்பலில் சாதுவனை ஏற்றிக் காவிரிப்பூம்பட் டினத்துக்கு அனுப்பினார்கள். இந்தச் செய்தியை மணிமேகலைக் காவியம் (ஆதிரை பிச்சையிட்ட காதை) கூறுகிறது.

பாண்டிய நாட்டு வாணிகரும் சாகத் தீவுக்குக் கப்பலோட்டிச் சென்று வாணிகஞ் செய்தனர். பாண்டி நாட்டிலிருந்த தமிழர் சாவக நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்து திரும்பியதையும் மணிமேகலைக் காவியம் கூறுகிறது.

‘மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறுத்தலின்
ஊனுயிர் மடிந்தது உரவோய் என்றலும்
... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... .. ... ..
அங்கந் நாட்டுப் புகுவதென் கருத்தென
வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறிக்
கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்
மாலிதை மணிபல்லவத்திடை வீழ்த்துத்
தங்கிய தொருநாள்.’                    (பாத்திர மரபு கூறிய கதை 76.72)

தமிழகத்திலிருந்து சாவகநாடு நெடுந்தூரத்திலிருந்தும் தமிழ் வாணிகர் அந்நாட்டுக்குக் கப்பலில் சென்று வாணிகஞ் செய்தனர். காரணம் என்னவென்றால் அக்காலத்தில் வேறெங்கும் கிடைக்காத வாணிகப் பொருள்கள் சாக நாட்டில்தான் கிடைத்தன.