| 54 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4 |
கடலில் போகிற மரக்கலங்கள் காற்றின் வேகத்தினால் திசை தப்பி ஓடுவதும் உண்டு. கப்பலோட்டும் பரதவர் அப்போது அவைகளை அடக்கிச் செலுத்தினார்கள். முரசு கடிப்படைய அருந்துறை போகிப் பெருங்கடல் நீந்திய மரம்வலி யுறுக்கும் பண்ணிய வினைவர் போல. (பதிற்று, 8ஆம் பத்து 6) கடலில் செல்லும் கப்பல்கள் சில புயலில் அகப்பட்டு, சமயத்தில் நீரில் முழ்குவதும் உண்டு. கடலில் முழ்கும் கப்பல், இருள் சூழும்போது மலை மறைவது போலக் காணப்பட்டது என்று புலவர் கொல்லன் அழிசி கூறுகிறார். (குறுந், 240: 5-7) கடுங்காற்றினால் தாக்குண்ட திண்மையான கயிறுகளையும் அறுத்து, பாய்மரத்தை ஒடித்து, நாவாயை அடித்துச் சென்று பாறைக் கல்லில் மோதி நீர்ச் சுழியில் அகப்பட்ட நாவாயை மாங்குடி மருதனார் கூறுகிறார். ‘பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின் வீங்குபிணி நோன்கயிறு அரீஇதை புடையூக், கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்துடன் கடுங்காற்று எடுப்பக் கல்பொருது இரைஇ நெடுஞ்சுழிப் பட்ட நாவாய்’ (மதுரைக் காஞ்சி 375 - 379) சாதுவன் என்னும் வாணிகன் காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்து சாவக நாட்டுக்குக் கப்பலில் பிரயாணஞ் செய்தபோது, அவனுடைய கப்பல் நாகர்மலைத் தீவுக்கு அருகில் காற்றினால் சாய்ந்து முழ்கிப் போனதையும் அவன் ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு தீவில் கரையேறியதையும் மணிமேகலை கூறுகிறது. ‘நளியிரு முந்நீர் வளிகலன் வவ்வ ஒடிமரம் பற்றி யூர்திரை யுதைப்ப நக்கசாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன்’ (மணி, 16: 13-16) மணிபல்லவத் துறைமுகத்திலிருந்து காவிரிப்பூம்பட்டினத்துக்குக் கப்பலில் வந்து கொண்டிருந்த கம்பளச் செட்டி என்பவனுடைய மரக்கலம் இரவில் கரையை யடைகிற சமயத்தில் கவிழ்ந்தது என்பதை மணிமேகலை கூறுகிறது. |