பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு55

‘துறைபிறக் கொழியக்
கலங் கொண்டு பெயர்ந்த அன்றே காரிருள்
இலங்குநீர் அடைகரை யக்கலங் கெட்டது’                    (மணி, 25: 189-191)

இவ்வாறு நடுக்கடலில் காற்றினாலும் மழையினாலும் புயலினாலும் இடுக்கண்களும் துன்பங்களும் நேர்ந்தும் அவை களையும் பொருட் படுத்தாமல் வாணிகர் நாவாய்களைக் கடலில் ஓட்டிச் சென்றனர். இயற்கையாக ஏற்படுகிற இந்தத் துன்பங்கள் அல்லாமல், கப்பல் வாணிகருக்குக் கடற் கொள்ளைக்காரராலும் துன்பங்கள் நேரிட்டன. ஆனால், கடற்கொள்ளைக்காரர் கிழக்குக் கடலில் அக்காலத்தில் இல்லை. மேற்குக் கடலிலே (அரபிக்கடல்) கப்பற் கொள்ளைக்காரர் இருந்ததை அக்காலத்தில் சேர நாட்டுத் துறைமுகத்துக்கு வந்து சென்ற யவனர் எழுதியுள்ளனர். துளுநாட்டின் ஏழில் மலைக்கு நேரே, கடலில் இருந்த ஒரு கடல் துருத்தியில் (சிறு தீவு) கடற்குறும்பர் தங்கியிருந்து வாணிகத்தின் பொருட்டு அவ்வழியாக வருகிற கப்பல்களைக் கொள்ளையடித்த னர் என்றும் ஆகவே அவ்வழியாகக் கப்பல்கள் போவது ஆபத்து என்றும் பிளைனி என்னும் யவனர் எழுதியுள்ளார்.

ஆனால், அக்காலத்தில் சேர நாட்டையரசாண்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அந்தக் கடற்குறும்பரை வென்று அடக்கினான். கடற்குறும்பர் அழிந்தபிறகு யவனக் கப்பல்கள் சேர நாட்டுத் துறை முகங்களுக்கு வந்து போயின.

கடல் துருத்தியில் இருந்த கடற்குறும்பர் அத்தீவில் கடம்ப மரம் ஒன்றை வளர்த்து வந்தனர். அவர்கள் அத்தீவிலிருந்து கொண்டு அவ் வழியாக வாணிகத்தின் பொருட்டு வந்த யவனக் கப்பல்களை முசிறித் துறைமுகத்துக்கு வாராதபடி தடுத்தனர். ஆகவே, அவர்களை அழிக்க இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன்னுடைய மக்கள் நால்வரில் ஒருவனான சேரன் செங்குட்டுவனைக் கப்பல் படையின் தலைவனாக அமைத்து அனுப்பினான். செங்குட்டுவன் கடலில் சென்று கடற்றுருத்திக் குறும்பரை வென்று அவர்கள் வளர்த்த கடம்ப மரத்தை வெட்டி அதன் அடி மரத்தினால் முரசு செய்தான். இவ்வாறு கடற்குறும்பர் அழிக்கப் பட்ட பிறகு யவனக் கப்பல்கள் சேரநாட்டுத் துறைமுகப் பட்டினங் களுக்கு வந்தன. நெடுஞ்சேரலாதன் கடம்பரை அழித்த செய்தியைப் பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, ஐந்தாம் பத்துகளினால் அறிகிறோம்.