பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு67

கரிவலம் வந்த நல்லூரிலும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கருக்காகக் குறிச்சியிலும், தஞ்சாவூர், மகாபலிபுரம் முதலான ஊர்களிலும் யவன நாணயங்கள் (உரோமபுரிப் பழங்காசுகள்) கிடைத்துள்ளன. இக்காசுகள் அக்காலத்தில் நடந்த தமிழ - யவன வாணிகத்துக்குச் சான்றாக இருக்கின்றன.

சாவகம்

தமிழகத்துக்குக் கிழக்கே நெடுந்தூரத்தில் ஆயிரம் மைலுக்கப்பால் கிழக்கிந்தியத் தீவுகள் உள்ளன. அந்தத் தீவுக் கூட்டத்தில் மிகப் பெரியவையும் சிறியவையும் மிக நுண்மையுமான தீவுகள் ஆயிரத்துக்கு மேற்பட்டவையுள்ளன. சங்ககாலத் தமிழர் அக்காலத்தில் அந்தத் தீவுகளுக்குக் கடல் கடந்து போய் வாணிகஞ் செய்தார்கள். அவர்கள் அந்தத் தீவுகளுக்குச் சாவக நாடு என்று பெயரிட்டிருந்தார்கள். மணிமேகலைக் காவியம் சாவகநாட்டைக் கூறுகிறது. அந்தத் தீவுகளிலே சில தீவுகளில் மட்டும் நாகரிகம் அடைந்த மக்கள் அக்காலத்தில் இருந்தனர். பெரும் பான்மையான தீவுகளில் இருந்தவர் அக்காலத்தில் நாகரிகம் பெறாதவர் களாக இருந்தார்கள். நாகரிகம் பெற்றிருந்த தீவுகளில் முக்கியமானது சாவகத் தீவு. இந்தத் தீவின் பெயரைத்தான் அக்காலத்தில் தமிழர் அங்கிருந்த எல்லாத் தீவுகளுக்குப் பொதுப் பெயராகக் கூறி னார்கள். சாவகத் தீவில்தான் தமிழர் முக்கியமாக வாணிகம் செய்தார்கள். சாவகத் தீவை யரசாண்ட அரசர்கள் வாணிகத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

இதைச் சூழ்ந்திருந்த மற்ற தீவுகளில் உற்பத்தியான பொருள்கள் எல்லாம் சாவகத் தீவுக்குக் கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டன. தமிழ் நாட்டிலிருந்து சென்ற தமிழ் வாணிகரும் வடஇந்தியாவிலிருந்து சென்ற இந்திய வாணிகரும் சீன நாட்டிலிருந்து சென்ற சீன வாணிகரும் சாவகத் தீவுடன் வாணிகஞ் செய்தார்கள். அக்காலத்தில் சாவகம் சீன நாட்டுக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே மத்திய வாணிக நிலையமாக இருந்தது.

இந்தத் தீவுகளில் எரிமலைகள் அவ்வப்போது நெருப்பையும் சாம்பலையும் கக்கின. இந்தச் சாம்பல் அந்தப் பூமிக்கு வளத்தை யும் செழிப்பையும் தந்தது. அக்காலத்தில் மற்ற நாடுகளில் கிடைக்காத பொருள்கள் (இலவங்கம், சாதிக்காய், குங்குமப் பூ, பளித வகை (கர்ப்பூர வகை) முதலான வாசப் பொருள்கள்) அங்கு உண்டாயின.