பக்கம் எண் :

82மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு’

(பட்டினப்பாலை 185-193)

இவற்றை ஆராய்வோம். பரிப்புரவிகள் (குதிரைகள்) கடல் வழியாகக் கப்பல்களில் வந்து இறங்கின. குதிரை தமிழ்நாட்டுக்கோ அல்லது பாரத நாட்டுக்கோ உரிய விலங்கு அன்று. அவை பாரசீகம், சிந்து தேசம் முதலான நாடுகளிலிருந்து கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டவை. அக்காலத்து அரசர்கள் நான்கு வகையான படைகளை வைத்திருந் தார்கள். அப்படை களில் குதிரைப்படையும் ஒன்று. தேர்ப்படைக்கும் குதிரை தேவைப்பட்டது. ஆகவே வெளிநாடுகளிலிருந்து குதிரைகள் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டன. காவிரிப்பூம்பட்டினத்தில் குதிரைகளும் இறக்குமதியாயின என்பது இதனால் தெரிகின்றது. தமிழ் வாணிகர் குதிரைகளை இலங்கைக்குக் கொண்டு போய் விற்றார்கள். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சேனன், குட்டகன் என்னும் இரண்டு தமிழர் இலங்கையரசனை வென்று இருபது ஆண்டு இலங்கையை யரசாண்டார்கள் என்றும் அவர்கள் அஸ்ஸ (அசுவ - அசுவம் - குதிரை) வாணிகனின் மக்கள் என்றும் மகாவம்சம் என்னும் சிங்கள நாட்டு வரலாற்று நூல் கூறுகின்றது. சூரதிஸ்ஸன் என்னும் சிங்கள அரசன் இலங்கையை அரசாண்ட காலத்திலே சேனன், குட்டகன் என்னும் பெயருள்ள இரண்டு தமிழர் சூரதிஸ்ஸனை வென்று அரசாட்சியைக் கைப்பற்றி அனுராதபுரத்திலிருந்து நீதியோடு இருபத்திரண்டு ஆண்டுகள் அரசாண்டார்கள். இவர்கள் அஸ்ஸ (அசுவ) நாவிகனின் மக்கள் என்று மகாவம்சம் (XXI: 10-11) கூறுகிறது. இவர்கள் கி.மு. 177 முதல் 155 வரையில் இலங்கையை அரசாண்டார்கள்.

காலின் வந்த கருங்கறி மூடையும் என்பது காற்றின் உதவியினால் கப்பல்களில் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட கறி (மிளகு) மூட்டை. அக்காலத்தில் சிறந்த மிளகு சேர நாட்டு மலைச்சரிவுகளில்தான் உண்டாயிற்று. அதற்கு அடுத்தபடியாகச் சாவக நாட்டில் (ஜாவா சுமத்ரா தீவுகளில்) மிளகு உண்டாயிற்று. ஆனால், சாவக நாட்டு மிளகு சேர நாட்டு மிளகைப்போல அவ்வளவு சிறந்ததன்று. சேர நாட்டு மிளகை யவனர்கள் பெரிய நாவாய்களில் வந்து பெருவாரியாக வாங்கிக் கொண்டு போன படியால் அது பற்றாக்குறைப் பொருளாக இருந்தது.