பக்கம் எண் :

84மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

காழகத்து ஆக்கம் என்பது காழகத்து (பர்மா தேசம்) பொருள்கள். இவற்றின் பெயரும் கூறப்படவில்லை. அரியவும் பெரியவும் என்பது தமிழ்நாட்டில் கிடைத்ததற்கு அருமை யானவையும் விலையுயர்ந் தவை யும் ஆன பொருள்கள்.

இவ்வாறு பல அயல்நாட்டுப் பொருள்கள் காவிரித் துறைமுகத் துக்குக் கொண்டுவரப்பட்டன என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன.

‘மலைப்பஃ றாரமும் கடற்பஃ றாரமும்
வளம் தலை மயங்கிய துளங்குகல இருக்கை’

என்று சிலம்பு (6:153-155) கூறுகிறது. (தாரம் - பண்டங்கள்) மலையில் உண்டாகும் பொருள்களும் கடலில் உண்டாகும் பொருள் களும் இத்துறைமுகத்தில் இறக்குமதியாயின.

இவ்வாறு வாணிகப் புகழ் பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம், கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயற்காற்றடித்து வெள்ளப் பெருக்கெடுத்து நீரில்முழுகிவிட்டதை மணிமேகலை கூறுகிறது. ஆனால் இப்பட்டினம் அடியோடு முழுகிவிடவில்லை. வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் இப்பட்டினம் நெடுங்காலம் பேர் பெற்றிருந்தது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இருந்த பட்டினத்து அடிகள் (பட்டினத்துப் பிள்ளையார்) காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர். அவர் துறவி யாவதற்கு முன்பு இப்பட்டினத்தில் பேர் போன கப்பல் வாணிகனாக (மாநாய்கனாக) இருந்தார். பிற்காலச் சோழர் காலத்திலும் காவிரிப்பூம் பட்டினம் பேர் பெற்றிருந்தது. பிறகு இப்பெரிய பேர் போன பட்டினம் சிறப்புக்குன்றிச் சிறிது சிறிதாகப் பெருமை குறைந்து இப்போது குக்கிராமமாக இருக் கிறது. இங்கு அண்மையில் தொல்பொருள் துறை ஆய்வாளர் நிலத்தை யகழ்ந்து பார்த்த போது பல பழம்பொருள்கள் கிடைத்தன. அவை இப்பட்டினத்தின் பழங்காலச் சிறப்புக்குச் சான்றாக இருக்கின்றன.

தொண்டித் துறைமுகம்

சங்க காலத்திலே கிழக்குக் கரையிலும் மேற்குக் கரையிலும் இரண்டு தொண்டிப் பட்டினங்கள் இருந்தன. இரண்டும் துறைமுகப் பட்டினங்கள். ஒரு தொண்டி சேரநாட்டில் மேற்குக் கடற்கரையில் இருந்தது; மற்றொரு தொண்டி பாண்டிநாட்டில் கிழக்குக் கடற்கரையில் இருந்தது. இந்தத் தொண்டி கிழக்குக் கரையிலிருந்த பாண்டி நாட்டுத் தொண்டியாகும்.