பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு97

முசிறித் துறைமுகம்

முசிறித் துறைமுகப்பட்டினம் சேர நாட்டுத் துறைமுகப் பட்டினங் களில் பேர்போனது. அக்காலத்தில் அது கிழக்குக் கடற்கரையில் உலகப் புகழ்பெற்றிருந்த காவிரிப்பூம்பட்டினம் போல மேற்குக் கரையில் உலகப் புகழ் பெற்றிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையி லிருந்து உண்டான பேரியாறு மேற்குக் கடலில் விழுந்த இடத்தில் முசிறித் துறைமுகம் அமைந்திருந்தது. சேர நாட்டுத் தலைநகரமாக அக் காலத்தில் இருந்த வஞ்சி (கரூர்) நகரம், பேரியாறு கடலில் விழுந்த இடத்துக்கு அருகில் பெரி யாற்றின் கரைமேல் இருந்தது. வஞ்சி நகரத்திலே சேரஅரசர் வாழ்ந்திருந்தார்கள். (இந்தச் சேரர் வஞ்சி, கொங்குநாட்டு வஞ்சி (கரூர்) அன்று. சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் வஞ்சி என்றும் கரூர் என்றும் பெயர் பெற்றிருந்த இரண்டு ஊர்கள் சங்க காலத்தில் இருந்தன). சேரநாட்டுத் தலைநகரமான வஞ்சிமா நகரத்து மேற்கே கடற் கரையில் பேரியாறு கடலில் சேர்ந்த புகர் முகத்தில் முசிறித் துறைமுகப் பட்டினம் இருந்தது.

முசிறித் துறைமுகத்தில் முக்கியமாக மிளகு ஏற்றுமதியாயிற்று. யவனக் கப்பல்கள் மிளகை வாங்குவதற்காகவே முசிறிக்கு வந்தன. யவனர் முசிறியை முசிறிஸ் என்று கூறினார்கள். வால்மீகி இரமாயணம் முசிறியை முரசி பதனம் என்று கூறுகின்றது. முசிறி வட மொழியில் முரசி ஆயிற்று. முசிறிக் கடலில் முத்துச் சிப்பி களும் உண்டாயின. சிப்பியி லிருந்து முத்துக் கிடைத்தது. முசிறி யில் உண்டான முத்துக்களைக் கவ்டல்லியரின் அர்த்த சாத்திரம் கௌர்ணெயம் என்று கூறுகின்றது. பேரியாற்றுக்குச் சூர்ணியாறு என்றும் பெயருண்டு. சூர்ணியாற்றின் முகத் துவாரத்தில் உண்டானபடியால் இந்த முத்து, கௌர்ணெயம் என்று பெயர் பெற்றது. சௌர்ணெயம் என்னும் பெயர் திரிந்து கௌர்ணெயம் என்றாயிற்று. முசிறிக் கடலில் உண்டான முத்துக்கள் முசிறிப் பட்டினத்தின் ஒரு பகுதியான பந்தர் என்னும் இடத்தில் விற்கப் பட்டன. முசிறிப் பட்டினத்தைச் சேர்ந்த பந்தரில் முத்துக்களும் கொடுமணம் என்னும் இடத்தில் பொன் நகைகளும் விற்கப் பட்டன என்று பதிற்றுப் பத்து கூறுகிறது.

இன்னிசைப் புணரி இரங்கும் பௌவத்து
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க்
கமழுந தாழைக் கானலம் பெருந்துறை

(6 ஆம் பத்து5)