பக்கம் எண் :

98மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 4

பந்தரிலும் கொடுமணத்திலும் முத்துக்களும் நன்கலங்களும் (நகைகள்) விற்கப்பட்டன என்று 7 ஆம் பத்து 7ஆம் செய்யுள் கூறுகின்றது.

‘கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்’

என்று 8ஆம் பத்து (4: 5-6) கூறுகின்றது. பந்தர் என்பது அரபு மொழிச் சொல். பந்தர் என்றால் ஆவணம், கடைவீதி என்பது பொருள். அக்காலத்திலேயே அரபியர் இங்கு வந்து வாணிகஞ் செய்தார்கள்.

கி.மு. முதல் நூற்றாண்டில் தென்மேற்குப் பருவக்காற்றை ஹிப்பலஸ் என்னும் யவன மாலுமி அரபு வாணிகரிடமிருந்து அறிந்து கொண்டு, அக்காற்றின் உதவியினால் நடுக்கடலினூடே கப்பலை முசிறிக்கு ஓட்டிக் கொண்டு வந்தான். தென்மேற்குப் பருவக் காற்றின் உதவியை யவனர் அறிவதற்கு முன்பு கப்பல் களைக் கரையோரமாகச் செலுத்திக் கொண்டுவந்தனர். அதனால் நெடுங்காலம் பிரயாணஞ் செய்ய வேண்டியிருந்தது. பருவக் காற்றின் உதவி கண்டுபிடித்த பிறகு யவனக் கப்பல்கள் நேரே முசிறித் துறைமுகத்துக்கு விரைவாகவும் கால தாமதம் இல்லாமலும் வரத் தொடங்கின. இந்தப் பருவக் காற்றுக்கு ஹிப்பலஸ் என்று பெயரை (அதைக் கண்டுபிடித்த ஹிப்பலஸ் என்பவனின் பெயரை) யவனர் சூட்டினார்கள்.

யவனக் கப்பல்கள் பவழம், கண்ணாடி, செம்பு, தகரம், ஈயம் முதலான பொருள்களைக் கொண்டு வந்து முசிறியில் இறக்குமதி செய்து இங்கிருந்து பல பொருள்களை ஏற்றுமதி செய்து கொண்டு போயின. ஏற்றுமதியான பொருள்களில் முக்கியமானதும் அதிகமாக வும் இருந்தது மிளகுதான். யவனர் மிளகை ஏராளமாக ஏற்றுமதி செய்து கொண்டு போனார்கள். உரோம் நாட்டில் மிளகு பெரிதும் விரும்பி வாங்கப் பட்டது. யவனர் மிளகை ஆவலோடு விரும்பி வாங்கினபடியால் அதற்கு ‘யவனப் பிரியா’ என்ற பெயர் உண்டாயிற்று. பெரிய யவனக் கப்பல் வாணிகர் பொன்னைக் கொண்டு வந்து விலையாகக் கொடுத்து மிளகை வாங்கிக் கொண்டு போனார்கள். தாயங் கண்ணனார், யவனர் பொன்னைக் கொடுத்து மிளகை ஏற்றிக் கொண்ட போனதைக் கூறுகிறார்.

‘சுள்ளியம் பேர்யாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம