பக்கம் எண் :

பண்டைத் தமிழகம் ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள்145

எழுதியதாகத் தோன்றுகிறது. எழுதிய போதுசில கோடுகளை விட்டு விட்டார் என்று தோன்றுகிறது. இந்த எழுத்துக்களை இவர் காட்டியபடி இங்கே தருகிறோம். (இதில் மூன்றாவது எழுத்து இடப் புறமாகத் திரும்பியிருக்க வேண்டியது வலப் புறமாகத் திரும்பி இருக்கிறது.)

திரு. ஐ. மகாதேவன் அவர்கள் இந்தக் கல்வெட்டுக்களை இவ்வாறு படித்துள்ளார்:16

நல்லி ஊர் அ பிடன் குறும் மகள்

கீரன் நொற்றி செயிபித பளி

நல்லியூர் பிடனுடைய இளைய மகன்களான கீரனும் ஓரியும் செய்வித்த பள்ளி.

இவர் படித்துப் பொருள் கூறுவதில் சில தவறுகள் உள்ளதை எடுத்துக்காட்டுவோம். நல்லி ஊர் என்பது மேலே முன் சாசனத்தில் கூறப்பட்ட நள்ளியூர், நல்லி என்பது தவறு என்றும் நள்ளி என்பதே சரி என்றும் முன்னே கூறினோம். குறும்மகன் என்பதை இளைய இரண்டு மகன்கள் என்று பொருள் கூறுகிறார். இது தவறு. குறும் மகன் என்பது இரண்டு இளைய மகன்களைக் குறிக்கவில்லை. அதன் பொருள் சிறிய மகன் என்பது. கீரன் ஒற்றி என்பவை இரண்டு மகன்களின் பெயர் என்று கூறுகிறார். இஃது ஒரே ஆளின் பெயரைக் குறிக்கிறது. கீரனும் ஓரியும் என்னும் இரண்டு மகன்கள் என்று எழுதிய இவர், பிறகு கோலாலம்பூர் மாநாட்டில், கீரன் ஓரி என்பது ஒரு மகனின் பெயர் என்று கூறியுள்ளார்.

இக் கல்வெட்டின் சரியான வாசகத்தையும் கருத்தையும் கூறுவோம்:

நள்ளி ஊர் பிடன் குறும் மகள்

கீரன் கொற்றி செய்பித பளி

‘நள்ளியூர் பிட்டனுடைய சிறிய மகளான கீரன் கொற்றி செய்வித்த பள்ளி’ என்பது இதன் கருத்து.