பக்கம் எண் :

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை101

“இந்த நெறியானது நல்லறிவையும் நற்காட்சியையுங் கொடுத்து ஞானத்தையும் சம்புத்தியையும் நிர்வாண மோக்ஷத்தையும் அளிக்கிறது. ததாகதரால் கண்டறியப்பட்ட அந்த வழி யாது? அதுதான் எட்டுநெறி என்று கூறப்படும் அஷ்டாங்கயோகம் என்பது. அவை:

1. ஸம்மா திட்டி - நற்காட்சி.

2. ஸம்மா ஸங்கப்போ - நல்லெண்ணங்கள்

3. ஸம்மா வாசா - நல்வாய்மை

4. ஸம்மா கம்மந்தோ - நற்செய்கை

5. ஸம்மா ஆஜீவோ - நல்வாழ்க்கை

6. ஸம்மா வியாயாமோ - நன் முயற்சி

7. ஸம்மா ஸதி - நற்கடைப்பிடி

8. ஸம்மா ஸமாதி - நற்றியானம்.

“பிக்குகளே! இவைதாம் ததாகதர் கண்டறிந்த மத்திம வழி. இது ஞானத்தையும், அமைதியையும் (சாந்தியையும்), சம்புத்தியையும், நிர்வாண மோக்ஷத்தையும் அளிக்கிறது.”

“பிக்குகளே! நான்கு சத்தியங்கள் (வாய்மைகள்) உள்ளன. அவையாவன:”

துக்க சத்தியம்:

“பிக்குகளே! பிறப்பு துன்பமானது. மூப்பு துன்பமானது. நோய் துன்ப மானது. இறப்பு துன்பமானது. நம்மால் வெறுக்கப்படும் பொருள்கள் துன்பந் தருகின்றன. நாம் விரும்பிய பொருள் கிடைக்காமற் போனால் துன்பம் உண்டாகிறது. சுருங்கக் கூறினால், ஐம்புலன்களினாலே உண்டாகிற ஆசைகளினாலே துன்பங்கள் உண்டாகின்றன.”

துக்கோற்பத்தி சத்தியம் (சமுதய சத்தியம்):

“பிக்குகளே! பிறப்புக்குக் காரணமாகிற வேட்கைகளும் அவற்றோடு தொடர் புடைய காமசுகங்களும் ஆசைகளும் துக்கத்தைத் தருகின்றன. இவை காமதிருஷ்ணா (சிற்றின்பத்தில் ஆசை), பவதிருஷ்ணா (வாழ்க்கையில் ஆசை), விபவதிருஷ்ணா (செல்வங் களில் ஆசை) என்று மூன்று வகைப்படும். இவை சமுதய சத்தியம் எனப்படும்.”