பக்கம் எண் :

100மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 9

“தாங்கள் இதுபோன்று முன்பு எப்போதும் பேசியதில்லை” என்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

“ஓ, பிக்குகளே! ததாகதர் பரிசுத்தமான உயர்ந்த சம்புத்தர். பிக்குகளே! ததாகதருக்குச் செவி கொடுத்துக் கேளுங்கள்; கேட்பீர்க ளானால் கிடைத்தற்கரிய நிர்வாணமோக்ஷ இன்பத்தை யடையப் பெறுவீர்கள்” என்று ததாகதர் கூறினார்.

அப்போது முனிவர்கள் பகவர்மீது நம்பிக்கை கொண்டார்கள். அவருடைய உபதேசத்தைச் செவி சாய்த்துக் கேட்க இணங்கினார்கள்.

முதல் தர்மோபதேசம்

சூரியன் மேற்கில் சென்றான். பூக்களில் தேனை யுண்டு மகிழ்ந்த தேனீக்களும் வண்டுகளும் ரீங்காரம் செய்து பறந்து கொண்டிருந்தன. மரக்கிளைகளில் மயில்கள் அமர்ந்திருந்தன. குயில்கள் இனிமையாகக் கூவின. மான் கூட்டங்கள் அமைதியாக உலவின. இசிபதனம் (மான் வனம்) என்னும் அந்தத் தோட்டம் அமைதியாகவும் அழகாகவும் விளங்கிற்று. கொண்டஞ்ஞர், பத்தியர், வப்பர், மகாநாமர், அஸ்ஸஜி என்னும் பெயருள்ள ஐந்து முனிவர்களும் தமது ஆசிரமத்துக்கு வெளியே வந்து அமர்ந்தார்கள்.

பகவன் புத்தர் அவர்களுக்கு எதிரிலே உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது தேவர்களும் பிரமர்களும் யக்ஷர்களும் அவ் விடம் வந்து அமர்ந்தார்கள். ஓசை அடங்கி அமைதியாக இருந்தது. பறவைகளும் விலங்குகளும் தத்தம் ஓசையை அடக்கிக்கொண்டு தத்தம் இடத்திலிருந்தே பகவன் புத்தர் உபதேசிக்கும் இனிய குரலைக் கேட்டன. புத்தர் பெருமான் ஐந்து தாபதர்களையும் விளித்து இவ்வாறு திருவாய் மலர்ந்தருளினார்:

“பிக்குகளே! துறவிகள் விலகவேண்டிய இரண்டு எல்லைகள் உள்ளன. மாறுபட்ட இந்த இரண்டு எல்லைகள் எவை என்றால், காம சுகல்லிகானுயோகம், அத்தகில மதானுயோகம் என்பன. காமசுகல்லி கானு யோகம் சிற்றின்ப சுகத்தை அனுபவிக்கிறது. இது இழிவும் தாழ்வும் விகாரமும் உள்ளது; இறுதியிலே தீமை பயப்பது. அத்தகில மதானுயோகம் என்பது, உடம்பை அதிகமாக வாட்டி ஒடுக்கி அடக்கித் துன்பங் கொடுப்பது; இதுவும் இறுதியில் யாதொரு பயனையும் கொடாமல் வீணாகப் போகிறது. பிக்குகளே! இந்த இரண்டு எல்லைகளையும் நீக்கி இடைவழியான ஒரு நெறியைத் ததாகதர் கண்டுபிடித்திருக்கிறார்.