பக்கம் எண் :

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை99

பிறகு அவர்கள் பகவரைப் பெயரிட்டழைத்தும் நண்பரே என்று விளித்தும் பேசினார்கள். இவ்வாறு அவர்கள் நண்பர் என்றும் கௌதமர் என்றும் அழைத்ததைக் கேட்ட பகவர், “பிக்குகளே, ததாகதரை நண்பர் என்றும் கௌதமர் என்றும் அழைக்காதீர்கள். ததாகதர் பௌத்திரமான சம்புத்தராவார். பிக்குகளே! செவி கொடுத்துக் கேளுங்கள். பிறவாத நிலை கைவரப் பெற்றேன். உங்களுக்குத் தர்மத்தை உபதேசிப்பேன், உயர்குடியிற் பிறந்தவர்கள் எதை அடைவதற்காக இல்லறத்தை விட்டுத் துறவுபூண்டு தபசு செய்கிறார்களோ அந்தப் பரிசுத்த மான உயர்ந்த வாழ்க்கை நீங்கள் அடைவீர்கள் அந்த வழியை உங்களுக்குப் போதிக்கிறேன். வாருங்கள்” என்று கூறினார்.

இவ்வாறு சொல்லக்கேட்ட ஐந்து துறவிகளும், “தாங்கள் மேற்கொண்ட இந்த வாழ்க்கையினாலே இந்தத் தபசினாலே, உயர்ந்த ஆற்றலைத் தாங்கள் அடைய முடியாது. தாங்கள் மேற்கொண்ட வாழ்க்கையினாலே, ஆத்தும வளர்ச்சியை யடைய முடியாது. தாங்கள் கடுந்தபசைக் கைவிட்டு உணவை உட்கொண்டு வாழ்கிறீர்கள். இவ்வித வாழ்க்கையினாலே, ஆத்தும உணர்வையும் பரிசுத்தமான உயர்ந்த ஞானத்தையும் எவ்வாறு பெறக் கூடும்?” என்று கேட்டனர்.

பகவன் புத்தர் இவ்வாறு கூறினார்: “ஓ, பிக்குகளே! ததாகதர் சுக போக வாழ்க்கை வாழவில்லை. தபசைக் கைவிடவும் இல்லை. ததாகதர் பௌத்திரமான சம்புத்தராவார். இறவாமை என்னும் பதவியைக் கைவரப் பெற்றவராவர். ததாகதர் காட்டும் வழியிலே நீங்கள் நின்று ஒழுகுவீர்களானால், நீங்கள் விரைவிலே உண்மையைக் கண்டு அறிந்து உணர்ந்து அதனை நேருக்கு நேராகக் காண்பீர்கள்.”

ஐந்து துறவிகளும் பகவர் கூறியதை நம்பவில்லை. முன் போலவே அவர்கள் தங்கள் ஐயப்பாட்டைக் கூறித் தெரிவித்தார்கள். பகவன் புத்தர் மூன்றாம் முறையும் மேலே கூறியதுபோலவே அவர்களுக்குக் கூறினார். மூன்றாம் முறையும் முனிவர்கள் நம்பாமல் தங்கள் ஐயத்தைத் தெரிவித்தார்கள்.

துறவிகள், தம்மிடம் நம்பிக்கைக் கொள்ளாததை அறிந்த பகவன் புத்தர் அவர்களைப் பார்த்து, “பிக்குகளே! இதற்கு முன்பு எப்போ தாவது இதுபோன்று ததாகதர் பேசியது உண்டா?” என்று கேட்டார்.