பக்கம் எண் :

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை111

பருத்தித் தோட்டத்தருகில் ஒரு மரத்தின் அடியிலே தங்கினார். அவ் வமயம், பத்ரவர்க்கிய குமாரர்கள் முப்பதுபேர் தமது மனைவியரோடு வினோதத்திற்காக நடந்து வந்தார்கள். அவர்களில் மனைவியில்லாத ஒருவர், கணிகை ஒருத்தியை அழைத்துக் கொண்டு அவர்களுடன் வந்தார். இவர்கள் வினோதமாக இருக்கும் சமயம் பார்த்து அந்தக் கணிகை, நகைகளையும் விலையுயர்ந்த பொருள்களையும் இவர்கள் அறியாதபடி எடுத்துக்கொண்டு போய்விட்டாள். சிறிது நேரங்கழித்து இதனை அவர்கள் அறிந்தார்கள்; அவளைத் தேடிப் புறப்பட்டார்கள்.

அப்படித் தேடி வருகிறவர்கள், குளிர்ந்த மரத்தின் அடியிலே தங்கியிருக்கிற பகவரைக் கண்டு வணங்கி “சுவாமி! இவ்வழியாகச் சென்ற ஒருத்தியைக் கண்டீர்களா?” என்று கேட்டார்கள்.

“குழந்தைகளே! ஒருத்தியைத் தேடுகிறதினாலே உங்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?” என்று கேட்டார் பகவர்.

“சுவாமி! எங்கள் மனைவியரோடு விளையாட்டின் பொருட்டு இங்கு வந்தோம். மனைவியில்லாத ஒருவர் ஒரு தாசியுடன் வந்தார். அவள் எங்கள் நகைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டாள். அதற்காக அவளைத் தேடுகிறோம்” என்று கூறினார்கள்.

“குழந்தைகளே! தன்னைத் தேடுவது உத்தமமானதா, அல்லது அயலாள் ஒருத்தியைத் தேடுவது உத்தமமானதா?” என்று வின வினார்.

“சுவாமி! நம்மை நாமே தேடிக்கொள்வது உத்தமமானது.” என்றனர்.

“அப்படியானால், குழந்தைகளே! உட்காருங்கள். உங்களுக்குத் தர்மத்தை உபதேசிக்கிறேன்” என்று அருளினார். அவர்களும் “அப்படியே, சுவாமி!” என்று அவரை வணங்கி ஒருபுறமாக அமர்ந்தார்கள்.

அப்போது பகவன் புத்தர் தானகாதை, சீலகாதை முதலிய காதைகளை முறைப்படி உபதேசம் செய்தார். அதைக்கேட்டு மகிழ்ந்து அவர்கள் மனத்தூய்மையடைந்தார்கள். பிறகு, நான்கு விதமான வாய்மைத் தத்துவத்தைப் போதித்தார். இத்தத்துவோப தேசத்தைக் கேட்ட அவர்களுக்கு அறிவுக்கண் விளங்கிற்று. சிலர் ஸ்ரோதாபத்தி பலன் அடைந்தார்கள். சிலர் சத்ருகாமி பலனையும், சிலர் அனாகாமி பலனையும் அடைந்தார்கள்.