பக்கம் எண் :

112மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 9

இவ்வாறு உபதேசங்கேட்டு உயர்ந்த நிலையையடைந்த பத்ர வர்க்கியர், பகவன் புத்தரை வணங்கித் தங்களுக்குச் சந்நியாசம் கொடுக்கும்படிக் கேட்டார். பகவர் ஏஹிபிக்ஷு கிரமத்தினாலே சந்நியா சமும் உபசம்பதாவும் அவர்களுக்குக் கொடுத்தார். பின்னர், இந்த முப்பது பிக்குகளையும் பல கிராமங்களுக்குத் தர்ம தூத வேலைக்காக அனுப்பித் தாம் தனியாக உருவேல கிராமத்திற்குச் சென்றார்.

திரிசரணம் (மும்மணி)

அந்தக் காலத்தில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்ற பௌத்தப் பிக்குகள் அற ஒழுக்கத்தைப் போதித்தார்கள். பௌத்த தர்மத்தைக் கேட்டவர்களில் சிலர் தாங்களும் துறவு கொள்ள விரும்பினார்கள். பிக்குகள் அவர்களை அழைத்துக் கொண்டு வந்து பகவன் புத்தரிடம் துறவுகொள்ளச் செய்தார்கள். அவ்வாறு வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களில் பலர் நெடுந்தூரம் நடந்து வந்தபடியால் மிகவும் களைத்து இளைத்துப் போயிருந்தார்கள். பிக்குகளும் களைத்து இளைத்திருந்தார்கள். இதனைக் கண்ட பகவன் புத்தர் ஒருசமயம் தனியே இருந்தபோது இது பற்றிச் சிந்தித்தார். துறவு பெறுவதற்காக இவர்கள் ஏன் இளைத்துக் களைத்து வரவேண்டும்? அவரவர்கள் இடத்திலேயே ஏன் பிக்குகள் அவர்களுக்குத் துறவு கொடுக்கக் கூடாது? இவ்வாறு சிந்தித்த பகவன் புத்தர் அன்று மாலையில் பிக்குச் சங்கம் கூடியபோது அவர்களுக்கு இவ்வாறு அருளிச் செய்தார். பிக்குகளே! துறவுகொள்ள விரும்புகிறவர்களை வெகு தூரத்தி லிருந்து அழைத்துக் கொண்டு வருகிறீர்கள். நெடுந்தூரத்தைக் கடந்து வர வேண்டியிருப்பதனால் அவர்களும் நீங்களும் களைத்துத் துன்பம் அடைகிறீர்கள். இனிமேலாக, நீங்கள் அந்தந்த ஊரிலேயே நீங்களே துறவு கொடுக்க உங்களை அனுமதிக்கிறேன்.

துறவுகொள்ள விரும்புகிறவர் முதலில் தலை மயிரையும் மீசை தாடிகளையும் மழித்துவிட வேண்டும். பிறகு அவர் மஞ்சள் நிறச் சீவர ஆடையை அணிந்துகொள்ள வேண்டும். பிறகு அவர், துறவு கொடுக்கிற பிக்குவின் காலை வணங்கி அமர வேண்டும். அப்போது துறவு கொடுக்கிற பிக்குவிடத்தில் துறவு பெறுகிறவர் திரிசரணம் கூற வேண்டும்.

‘புத்தம் சரணங் கச்சாமி
தம்மம் சரணங் கச்சாமி
சங்கம் சரணங் கச்சாமி’