பக்கம் எண் :

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை139

அவருக்கும் தனக்கும் கூடாவொழுக்கம் உண்டென்றும் கூறுவாள். இவ்வாறு சிலகாலஞ் சென்றது. பிறகு, அந்தச் சமயத் தலைவர்கள், சில கொடியவர்களுக்குக் கைநிறையக் காசு கொடுத்துச் சுந்தரியைக் கொன்று பகவன் புத்தர் தங்கியிருக்கும் ஜேதவன ஆராமத்தில் போட்டுவிடும்படி ஏவினார்கள். அக் கொடியவர்களும் அவ்வாறே சுந்தரியைக் கொன்று ஆராமத் தோட்டத் தில் போட்டுவிட்டார்கள்.

பொழுது, விடிந்ததும், சுந்தரியைப் பௌத்தர்கள் கொலை செய்து விட்டார்கள் என்று அரசரிடம் கூறினார்கள். இதனால், பகவன் புத்தருக்கும் பௌத்த சங்கத்துக்கும் பெரும் அபவாதம் ஏற்பட்டது. ஆனால், சில காலத்திற்குள் குற்றவாளிகள் அகப்பட்டுக் கொண்டார்கள். கொலை செய்த கொடியவர்கள் குடித்து வெறித்துத் தமக்குள் சச்சரவு செய்து கொண்டபோது, அவர்கள் சுந்தரியைக் கொலை செய்த செய்தி வெளிப் பட்டது. அரசன் அவர்களை அழைத்து விசாரித்தபோது, சுந்தரியைக் கொன்றவர்கள் தாங்களே என்றும், பௌத்த விரோதிகளான சமயத் தலைவர்கள் தங்களுக்குக் காசு கொடுத்துக் கொலைசெய்து புத்தர் ஆராமத்தில் போட்டு வரும்படிக் கூறினார்கள் என்றும் தாங்கள் அவ்வாறே செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்கள். அரசன் குற்றவாளிகளைத் தண்டித்தார்; புத்தர்மேல் சுமத்தப் பட்ட அபவாதம் நீக்கப்பட்டது.

விசாகை

அநாத பிண்டிகன் என்னும் செல்வச் சீமானுக்கு விசாகை என்னும் பெயருள்ள குமாரத்தி ஒருத்தி யிருந்தாள். அங்க நாட்டில் பெருஞ் செல்வனாகிய மிகாரர் என்னும் பிரபுவுக்குப் புண்ணிய வர்த்தனன் என்னும் குமாரன் இருந்தான். புண்ணிய வர்த்தனக் குமாரனுக்கு விசாகையைத் திருமணம் செய்து வைத்தார்கள். விசாகை, கணவன் வீடு வந்து சேர்ந்தாள்.

விசாகையினுடைய மாமனார் நிர்க்கந்த (ஜைன) மதத்தைச் சேர்ந்தவர். விசாகையோ பகவன் புத்தரை வழிபட்டு அவரது அற நெறிப்படி நடக்கிறவள். விசாகையின் மாமனார், விசாகையை நிர்க்கந்த மதத்தில் சேரும்படிக் கூறிப் பல இன்னல்களைச் செய்தார். ஆனால், விசாகை பகவன் புத்தரையே வழிபட்டு வந்தாள். அன்றியும், தனது மாமியார் முதலியவர் களுக்கும் அந் நகரத்துப் பெண்களுக்கும் பகவன் புத்தர்மீது பக்தி உண்டாகும்படிச் செய்தாள். அவர்கள் எல்லோரும் பகவன் புத்தரைக் கண்டு அவரது அறநெறியைக் கேட்க விருப்பங் கொண்டனர்.