பக்கம் எண் :

140மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 9

இதனை ஞானதிருஷ்டியினால் அறிந்த பகவன் புத்தர் தமது சீடர் களுடன் அங்கநாடு சென்று விசாகையின் வீட்டுக்குச் சென்றார். விசாகை பகவரை வரவேற்று உணவு கொடுத்து அவரிடமிருந்து அறநெறி கேட்டாள். அதனைக் கேட்ட உற்றார் உறவினரும் ஏனையோரும் மனம் மகிழ்ந்து பௌத்தராயினர். விசாகை பேரன் பேத்திகளோடு நெடுங்காலம் வாழ்ந்து பகவன் புத்தருக்கும் புத்த சங்கத்துக்கும் பெரும் பொருளைத் தானம் வழங்கினாள். பின்னர்த் துறவு பூண்டு பிக்குணியாகி இறுதியில் மோட்சம் அடைந்தாள்.

தேவதத்தன்

பகவன் புத்தருக்கு எழுபத்திரண்டு வயதாயிற்று. ததாகதருக்கு நாடெங்கும் பேரும் புகழும் மதிப்பும் ஏற்பட்டது. பௌத்த சங்கத்தை மக்கள் மதித்துப் போற்றினார்கள். புத்தருடைய உறவினனும் அவரிடம் துறவுபூண்டு பிக்கு சங்கத்தில் இருப்பவனுமாகிய தேவதத்தனுக்குப் பதவி ஆசை ஏற்பட்டது. பகவன் புத்தருக்குப் பதிலாகத்தானே பௌத்த சங்கத்தின் குருவாக இருந்து பெருமையடையவேண்டும் என்று அவன் பெரிதும் விரும்பினான். நாளுக்கு நாள் இந்த ஆசை அவன் உள்ளத்தில் பெருகி வளர்ந்தது. அதுமட்டுமன்று. பகவன் புத்தர் நாட்டில் அடைந்த, புகழையும் சிறப்பையும் கண்டு அவனுக்குப் பொறாமையும் உண்டாயிற்று.

தேவதத்தன், விம்பசார அரசன் மகனும் இளவரசனுமான அஜாத சத்துருவிடம் சென்று, தான் அடைந்துள்ள இருத்திகளின் உதவியினாலே சில அற்புதங்களைச் செய்துகாட்டி அரசகுமாரனைத் தன்வயப்படுத்தினான்.

தேவதத்தன் என்றைக்காவது ஒருநாள் பௌத்த சங்கத்தின் தலைமைப் பதவியைப் பெறவேண்டும் என்று எண்ணினான். வெளுவன ஆராமத்தில் பகவன் புத்தர் உபதேசம் செய்து கொண்டிருந்தபோது, ஒருநாள் தேவதத்தன் எழுந்து நின்று வணங்கி, பகவன் புத்தருக்கு அதிக வயதாய்விட்டபடியால், சங்கத்தின் தலைமைப் பதவியைத் தனக்குக் கொடுக்கும்படிக் கேட்டான். “புத்த பதவி ஒருவர் கொடுக்க ஒருவர் பெறுவதன்று. பல பிறவிகளில் முயன்று பெறப்படுவது புத்த பதவி” என்றுகூறி பகவன் புத்தர் மறுத்துவிட்டார். அதுமுதல் தேவ தத்தனுக்குப் பகைமை உணர்ச்சி ஏற்பட்டுப் பகவன் புத்தரை எப்படி யாவது ஒழிக்க வேண்டும் என்னும் தீய எண்ணம் வளர்ந்தது.