பக்கம் எண் :

  

புத்தராகிப் பௌத்த தர்மம் உபதேசித்தது

போதிமரத்தை அடைதல்

இவ்வாறு கௌதம முனிவர் அன்று பகலில் பத்திரவனத்தில் தங்கிச் சித்த விசுத்தி செய்துகொண்ட பிறகு மாலை நேரமானவுடன் சாலவனத்தை விட்டுப் புறப்பட்டுப் போதிமரம் (அரச மரம்) இருக்கும் இடத்திற்குச் சென்றார். செல்லும் வழியிலே எதிர்ப்பட்ட சுவஸ்திகன் என்னும் பிராமணன் இவருக்கு எட்டுப்பிடி தர்ப்பைப் புல்லைக் கொடுத்தான். தர்ப்பையைப் பெற்றுக்கொண்ட கௌதம முனிவர், போதிமரத்தை யடைந்து அதன் தென்புறத்திலே நின்றார். அப்போது அவ்விடம், தாமரை இலையில் தங்கிய தண்ணீர் உருளுவது போன்று நிலம் அசைந்தது. பிறகு மேற்குப்பக்கம் போனார். அங்கும் நிலம் அசைந்தது. அந்த இடத்தைவிட்டு வடக்குப்பக்கம் போய் நின்றார். அவ்விடத்திலும் நிலம் அசைந்தது. பிறகு கிழக்குப்புறம் வந்தார். அங்கு நிலம் அசைவற்று இருந்தது. இதுவே தகுந்த இடம் என்று கண்டு போதிசத்துவர் தமது கையிலிருந்த தர்ப்பைப் புல்லைத் தரையில் பரப்பிவைத்து அதன்மீது அபராஜித பரியங்கத்தோடு அமர்ந்தார். அதாவது உறுதியான மனத்தடன் அமர்ந்தார். “என்னுடைய உடம்பில் உள்ள தோல், சதை, இரத்தம், நரம்பு, எலும்பு முதலியவை உலர்ந்து வற்றிப் போனாலும் நான் புத்த பதவியை யடையாமல் இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன்” என்று உறுதியான எண்ணத்துடன் அரசமரத்தில் முதுகை வைத்துக் கிழக்கு நோக்கி இருந்து பதுமா சனத்தில் (வச்சிராசனம்) அமர்ந்தார்.

மாரன் போர்

கௌதம முனிவராகிய போதிசத்துவர் போதிமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்த போது அவரைப் போற்றி வணங்குவதற்காகத் தேவர்களும் பிரமர்களும், ஆற்றில் நீரோடுவது போலக் கூட்டங் கூட்டமாக தேவலோகத்திலிருந்து மண்ணுலகத்திற்கு வந்தார்கள். தேவர்கள் எல்லோரும் இங்குவந்து விட்டபடியால் இதுவே தேவலோகம்போலக் காணப்பட்டது. மாலை வேளையானபடியினாலே சூரியன் மறைந்துவிட்டான். வெள்ளுவாநாள் ஆனபடியினாலே முழு