பக்கம் எண் :

88மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 9

களுடைய ஐயத்தை நீக்குவதற்காக, ஆசனத்தைவிட்டுக் கிளம்பி ஆகாயத்திலே நின்றார். இதைக் கண்ட தேவர்கள் ஐயம் நீங்கினார்கள்.

இவ்வாறு தேவர்களுடைய ஐயத்தை நீக்கிய பின்னர், பகவன் புத்தர் தரையில் இறங்கி புத்த ஆசனத்தைக் கண் இமைக்காமல் பார்த்தார். “இந்த ஆசனத்தில் இருந்தபோது எனக்குப் புத்த பதவி கிடைத்தது. நான்கு அசங்கிய கல்ப லக்ஷகாலம் வரையில் நான் நிறைவேற்றிய பாரமிதைகளின் பலனாக இந்தப் புத்த பதவி இந்த ஆசனத்தில் இருக்கும்போது எனக்குக் கிடைத்தது” என்று நினைத்து நன்றியறியும் உள்ளத்துடன் அந்தப் போதியாசனத்தைக் கண்களி னாலே பார்த்துக்கொண்டே இருந்தார். இவ் வாறு இரண்டாவது வாரம் கழிந்தது. இவ்வாறு இமை கொட்டாமல் பார்த்திருந்த இடத்திற்கு அநிம சலோசன சைத்தியம் என்பது பெயராகும்.

மூன்றாம் வாரம்

பின்னர் மூன்றாவது வாரம் முழுவதும், போதியாசனத்தின் அருகிலேயே ததாகதர் கிழக்கு மேற்காக உலாவிக் கொண்டிருந்தார். இந்த இடத்திற்கு இரத்தின சங்க்ரமன சைத்தியம் என்பது பெயராகும்.

நான்காம் வாரம்

நான்காவது வாரத்தில், போதி மரத்திற்கு வடமேற்கில் சென்று இரத்தின கிருஹத்தில் அமர்ந்து தாம் கண்ட போதி தர்மத்தை மனத்திலே நினைந்து நினைந்து ஆராய்ந்தார். இந்தத் தர்மத்தைக் கேட்டு இதன்படி ஒழுகுகிறவர்கள், சீலத்தில் மனதை நாட்டிச் சமாதியைத் தியானித்துப் பிரஞ்ஞா (அறிவினால்) மூலமாகத் தத்துவத்தை நன்கறிந்து உயர்ந்த நெறியில் ஒழுகுவார்கள் என்று கருதினார். சீலத்தைப்பற்றி வினய பிடகம், சமாதியைப்பற்றி சூத்திராந்தபிடகம், பிரஜ்ஞாவைப்பற்றி அபி தர்மபிடகம் என்னும் மூன்றையும் சிந்தித்தார். இவை எல்லாத் தர்மங்களையும்விட மேலானதாகவும் ஆழமானதாகவும் இருப்பதை அறிந்து உவகை கொண்டார்.

அப்போது அவருடைய இருதயத்தில் உதிரம் மிகவும் தூய்மை யாயிருந்தது. தேகத்தில் ஒளி வீசிற்று. அவருடைய திருமேனியி லிருந்து எண்பது முழம் வட்டத்தில் ஒளிக்கிரணங்கள் ஒளி வீசின. அப்போது அந்த இடத்திலே ஆயிரம் சூரிய சந்திரர்கள் இருந்து ஒளி வீசுவது போலத் தோன்றியது.