பக்கம் எண் :

தமிழில் சமயம் - கௌதம புத்தரின் வாழ்க்கை89

பகவன் புத்தர் போதிஞானம் அடைந்து நான்கு வாரம் வரையில் போதிமரத்தின் அருகிலேயே இருந்தார். ஐந்தாவது வாரம் அவ் விடத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்று அஜபாலன் என்னும் ஆல மரத்தை அடைந்து அம்மரத்தடியில் அமர்ந்து ஒருவார காலம்வரையில் விமுக்தி சுகத்தை அனுபவித்துக்கொண்டே யோகத்தில் அமர்ந்திருந்தார்.

பிராமணன் யார்?

இவ்வாறு ஒரு வாரம் வரையில் யோகத்திலிருந்த பகவன் புத்தர், யோகத்திலிருந்து விழித்தார். அப்போது ஒரு பிராமணன் அவரிடம் வந்தான். அந்தப் பிராமணன் முன்னரே இவருக்கு அறிமுகமானவன். போதிசத்துவர், உருவேல என்னும் இடத்தில் இருந்த போதும் சேனானீ கிராமத்துக்கு அருகில் ஆசிரமம் அமைத்துக்கொண்டிருந்தபோதும் அவன் இவரிடம் பழகியவன். அந்தப் பிராமணன் பிராமணப் பிறப்பே உயர்ந்த பிறப்பு என்னும் எண்ணம் உடையவன். அவன் பகவன் புத்தரிடம் வந்து, “ஓ கௌதமரே! எந்தெந்தக் காரணங்களினாலே ஒருவன் பிராமணனாகக் கூடும்? பிராமணனுடைய இயல்பு என்ன?” என்று கேட்டான்.

அதற்குப் பகவன் புத்தர் இவ்வாறு விடை கூறியருளினார் : “யார் ஒருவர் பாபங்களைப் போக்கிக் கொண்டாரோ, யார் மனமாசு நீங்கி அழுக்கற்று மனத் தூய்மை யடைந்தாரோ, யார் தன்னடக்கமாக வுள்ளாரோ, யார் வேதத்தைப் (வேதம் - ஞானம்) பெற்றிருக்கிறாரோ அவர்தாம் உண்மையான பிராமணன் என்னும் பெயருக்கு உரியவர் ஆவர்” என்று அறிவுறுத்தினார்.

மாரன் அச்சுறுத்தல்

அஜபால மரத்தின் அடியில் இருந்த பகவன் புத்தர், பொருளற்ற கடுமையான உண்ணாவிரதத்தினால் உடம்பை வாட்டிக் கடுந் தபசு செய்வதிலிருந்து விலகி, மிக நன்மையான மத்திம வழியிலே சென்று புத்த ஞானப் பதவியை யடைந்தது எவ்வளவு நன்மையானது என்று தமக்குள் எண்ணினார். இவ்வாறு பகவன் புத்தர் எண்ணியதையறிந்த மாரன் அவ்வமயம் இவரிடம் வந்து, “உயிர்களைத் தூய்மைப்படுத்துகிற கடுமையான தவம் செய்வதிலிருந்து நீங்கின நீர், தூய்மையானவர் என்று நினைக்கிறீரா? நீர் சுத்த மார்க்கத்திலிருந்து வெகுதூரம் விலகியிருக் கிறீர்” என்று கூறினான். இவ்வாறு பேசினவன் மாரன் என்பதை பகவன் புத்தர் அறிந்து கொண்டார். அவனுக்கு இவ்வாறு விடை கூறினார்.