பக்கம் எண் :

240மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 12

அத்யந்தகாமன் என்னும் பெயர் மகேந்திரவர்மனின் மகன் நரசிம்மவர்மனுக்கும் அவன் பேரனான பரமேசுவரவர்மனுக்கும் உண்டு. ஆகவே, இந்தக் குகைக் கோயில், நரசிம்மவர்மன் காலத்தி லாவது அவனுடைய பேரன் பரமேசுவர்மன் காலத்திலாவது அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தச் சாசன எழுத்து நரசிம்ம வர்மன் காலத்து எழுத்தாக இல்லாமல் பரமேசுவர வர்மன் காலத்து எழுத்துப்போல இருப்பதால் இக் குகைக் கோயிலைப் பரமேசுவர வர்மன் அமைத்திருக்க வேண்டும் என்பது மற்றொரு கருத்து.

சாசன எழுத்துக்களின் அமைப்பை மட்டும் கொண்டு காலத்தை முடிவு செய்வது தவறான முறையென்றும், இதனுடன் மற்ற ஆதாரங்களையும் ஒத்திட்டுப் பார்த்துக் காலத்தை முடிவு செய்யவேண்டும் என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். எழுத்தின் அமைப்பு அத்யந்தகாமன் காலத்ததாக இருந்தாலும் குகையின் தூண்கள் முதலிய அமைப்பு முதல் மகேந்திரவர்மன் காலத்தன வாகத் தோன்றுகின்றன. மேலும், அத்யந்தகாம பல்லவேசுவரம் என்னும் பெயர் வேறு இரண்டு கோயில்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. மகாபலிபுரத்திலுள்ள “கணேச ரதம்” என்னும் பெயர் வழங்குகிற பாறைக் கோயிலுக்கும் அத்யந்த காம பல்லவேசுவரம் என்னும் பெயர் வழங்கியது என்பது அங்குள்ள சாசனத்தினால் தெரிகிறது. அங்குள்ள சாசனம், இந்தக் குகைக்கோயிலில் எழுதப்பட்டுள்ள அதே எழுத்தினால் அதே சுலோகங்களைக் கூறுகின்றன. “தர்மராச ரதம்” என்று பெயர் கூறப்படுகிற பாறைக் கோயிலும் அத்யந்த காம பல்லவேசுவரக்ருகம் என்னும் பெயர் இதே பல்லவகிரந்த எழுத்தினால் பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றை யெல்லாம் கருதும் போது, நரசிம்மவர்மன் காலத்திற்குப் பிறகு ஒரு பல்லவ அரசனால் இந்தச் சாசனங்கள் மேலே கூறிய இந்த மூன்று இடங்களிலும் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

“தர்மராச மண்டபம்” என்று பெயர் கூறப்படுகிற இந்தக் குகைக் கோயில், இங்குள்ள சாசனம் கூறுகிறபடி தனிப்பட்ட சிவன் கோயில் அன்று. மும்மூர்த்திகளுக்காக ஏற்பட்ட மும்மூர்த்திக் கோயில் என்பது இதிலுள்ள திருநிலையறைகளினால் அறியலாம். எனவே, இங்குள்ள சாசனத்தினால் காணப்படுகிறபடி இது அத்யந்த காம பல்லவேசு