தமிழகக் கலை வரலாறு - சிற்பம் - கோயில் | 247 |
இராமாதுச மண்டபம் என்று பிற்காலத்து வைணவர்கள் பெயர் சூட்டியிருப்பது வியப்பாக இருக்கிறது. கிழக்குப்பார்த்தபடி ஒரே பெரும் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட இக் குகைக்கோயில் ஒரு பெரிய முகமண்டபத் தையும் அதற்குப்பின்னால் மூன்று கருவறைகளையும் உடையது. முகமண்டபத்தின் தூண்களை நிமிர்ந்து உட்கார்ந்துள்ள சிங்கங்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தச் சிங்கங்களின் கம்பீரமும் அழகும் இறுமாந்து உட்கார்ந்துள்ள நிலையும் இந்த மண்டபத்திற்கு அழகைத்தருகின்றன. இக்கோயிலின் முகமண்டபத்தின் இரண்டு கோடியிலும் இளங்கோயில் என்னும் கோயிலின் சிற்ப அமைப்புக்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற இளங்கோயில் உருவம், மாமல்லபுரத்திலேயே அர்ச்சுன தபசு என்று தவறாகப் பெயர் கூறப்படுகிற சகரசாகரர் சிற்ப உருவத்திலும் காணப்படுகிறது. இக்குகைக்கோயில் தனித்தனியாக இருந்த மூன்று கருவறை களும் பிற்காலத்தில் சமய வெறியர்களினால் சிதைக்கப் பட்டுள்ளன. அன்றியும் இங்கிருந்த சிற்ப உருவங்களை உளிகொண்டு செதுக்கி அழித்துவிட்டனர். கருவறைகளில் இருந்த சிவலிங்கங்களைப் பெயர்த்தெடுத்துப் போட்டுவிட்டனர். இங்கிருந்து அழிக்கப்பட்ட சிற்பங்களைப்பற்றி இந் நூலில் வேறு இடத்தில் காண்க. இங்குள்ள முகமண்டபத்தின் தரைப்பாறையில் அழகு வாய்ந்த பல்லவக்கிரந்த எழுத்தினால் எழுதப்பட்ட வடமொழிச் சுலோகம் ஒன்று காணப்படுகிறது. இது தருமராஜமண்டபத்திலும், கணேச இரதத்திலும் எழுதப்பட்டுள்ள வடமொழிச் சுலோகங்களின் கடைசி சுலோகமாகக் காணப்படுகிறது. இந்தச் சுலோகத்தின் கருத்து இது:- “தீயவழியில் செல்லாமல் தடுத்தருளுகிற உருத்திரன் எழுந்தருளப் பெறாத மனத்தையுடையவர்கள் ஆறுமடங்கு சபிக்கத்தக்கவர் ஆவர்.”3 இந்தச் சுலோகம், இங்கிருந்த சிற்பங்களை அழித்து, சிவலிங்கங்களைப் பெயர்த்தெறிந்து, கருவறைகளைச் சிதைத்து அழிவு செய்தவர்களைச் சபித்துக்கொண்டிருப்பதுபோலத் தோன்று கிறதல்லவா? |